இந்தியா மற்றவை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை – 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

திருவனந்தபுரம்:-

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 8-ந்தேதி தொடங்கியது.தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் கேரளாவில் அதிக மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. ஜூன் மாதம் முழுவதும் கண்ணாமூச்சி காட்டிய மழை ஜூலை மாதம் தொடங்கியதும், தீவிரமாக பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, கேரளாவில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.கேரளாவின் 14 மாவட்டங்களில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் 240 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபோல மற்ற பகுதிகளில் 115 முதல் 204.5 மி.மீ. வரை மழை பெய்யும் என்றும் கூறி உள்ளது.வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரளா முழுவதும் பேரிடர் மீட்புப்பணி குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.

அணைகள், நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.

இம்முறை அதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.மேலும் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் வரும் பகுதிகளில் குடியிருப்போர் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.