இந்தியா மற்றவை

கேரளாவில் மீண்டும் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை…

 கேரளா:-

மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் பேரிழப்புகளை அந்த மாநிலங்கள் சந்தித்து வருகின்றன. குறிப்பாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

மலப்புரம், வயநாடு, கொச்சி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.40 பேர் காணாமல் போயுள்ளனர். 2.52 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் இன்று மழை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் தெற்கு கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தோஷ் கூறியதாவது:-

”வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கேரளாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும். கோழிக்கோடு உள்ளட்ட வட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

இந்த மாவட்டங்களில் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு சந்தோஷ் கூறினார்.