தற்போதைய செய்திகள்

கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டது…

கேரளத்தில் நிபா வைரஸ் மீண்டும் தாக்கியுள்ளது, பாதிக்கப்பட்ட நபரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. நிபா வைரஸ் தாக்கி, கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் வரை உயிரிழந்தனர்.அங்குள்ள சங்கரோத் என்ற கிராமத்தில் இருந்து நிபா வைரஸ் தாக்குதல் தொடங்கியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், பெரம்பரா என்ற ஊரில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில் ஆய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில், ஓராண்டு கழித்து கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.

எர்ணாகுளம் மாவட்டம் வடபரவூரை சேர்ந்த, தொடுபுழாவில் படித்து வரும் கல்லூரி மாணவர் நிபா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாநில சுகாதாரத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டது.அதேசமயம், நிபா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக ரத்த மாதிரி, புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் நபர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது, புனேவில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபருடன் இருந்த மேலும் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டு கற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம், அரசு முழுவீச்சில் உரிய தயாரிப்புகளுடன் நிலைமையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள 86 பேரில் 2 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவரின் ரத்த மாதிரி, நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக ஆலப்புழை, மணிப்பால், புனே ஆகிய ஊர்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் பாதித்தவருக்கு தொடக்கத்தில் சிகிச்சை அளித்த 2 செவிலியர்களுக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருப்பதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் கேரள அரசுக்கு தேவையான எல்லா உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடுமா என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வனவிலங்குகள் துறையின் உதவியையும் நாடியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருடன் இன்று காலை தமது இல்லத்தில் ஆலோசனை நடத்தியதாகவும், 6 அதிகாரிகளை கொண்ட குழு நேற்றே கேரளத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே, கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, எல்லையோர மாவட்டங்களில், தமிழக சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.