தற்போதைய செய்திகள்

கோமாளி இல்லாவிட்டால் நாடகம் எடுபடாது – மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலடி…

விருதுநகர்:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக கூட்டணி கட்சித் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கு முதல்வர் மற்றும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோமாளி இல்லாவிட்டால் நாடகம் எடுபடாது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. தேர்தல் முடிந்த பின்னர் கோமாளி யார் ஏமாளி யார் என்பது தெரிய வரும். எங்கள் கட்சியில் உழைத்து வருபவர்களுக்கு மட்டும் தான் சீட் கிடைக்கும். புரட்சித்தலைவி அம்மா இருந்த போதே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கழக கூட்டணி ஜனநாயக கூட்டணி. திமுக ரவுடி கட்சி. ராதாரவியை சமயம் பார்த்து ஸ்டாலின் பழிவாங்கி விட்டார்.

தி.மு.க.வில் 3-வது தலைமுறையாக ஸ்டாலின் மகன் வந்துள்ளார். இனி அவர்கள் வீட்டில் இருக்கும் எல்லாத்தையும் கொண்டு வந்து விடுவார்கள். கழகத்தில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டி.டிவி தினகரனுக்கு கண்டிப்பாக பொதுச் சின்னம் கிடைக்காது. தேர்தல் கமிஷனில் ஒரு மாதத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டும். சட்டத்தை யாராலும் வளைக்க முடியாது. அப்படி அந்த சின்னம் வழங்கினால் அது ஒரு தவறான முன்மாதிரியாக போய்விடும். எத்தனை காலத்திற்கு தான் டி.டி.வி தினகரன் அவரது தொண்டர்களை ஏமாற்றுவார் என்று பார்ப்போம்.

புரட்சித்தலைவி அம்மா இறந்து போனதற்கு காரணமே தி.மு.க. தான். அவர்கள் போட்ட பொய் வழக்கில் மனம் நொந்து போய் தான் இறந்து போனார். திமுக ஆட்சி காலத்தில் யாராவது தொழில் செய்ய முடியுமா, ஒரு பத்திரம் தான் பதிய முடியுமா? கவுன்சிலர்கள் அடாவடி வசூல் செய்வார்கள். ஆனால் கழக ஆட்சிக் காலத்தில் அமைதி நிலவும். அப்படி எதாவது தவறு நடந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவார்கள். கழக ஆட்சி ஒரு சட்ட ஆட்சியாகும். ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது திமுக ஆட்சி. தடையை நீக்கியது கழக ஆட்சி. எங்கள் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.