தமிழகம்

கொடநாடு வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசக்கூடாது – ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

கொடநாடு விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கொடநாடு விவகாரம் குறித்து பேசினால் அந்த தடை நீக்கப்படும் என்றும், விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

சென்னை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டங்களிலும் அது குறித்து பேசுவதாகவும், இது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதாக இருப்பதால் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரினார்.

அப்பொழுது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு வழக்கு பதிவு செய்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் வழக்கு தொடர்ந்து அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றுள்ள நீங்கள் அதே கருத்தை தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு உரிய அறிவுரை வழங்கும்படியும் நீதிபதி தெரிவித்தார்.

ஒருவேளை அந்த கருத்துக்களை தான் தொடர்ந்து பேசுவீர்கள் என்றால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும், சென்னை அமர்வு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளுங்கள் என்றும் எச்சரித்ததுடன் விசாரணையை எதிர்கொள்ள என்ன தயக்கம் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் பாபு முருகவேல் தொடர்ந்த வழக்கு தொடர்பான உத்தரவையும், அவதூறு வழக்கு தொடர்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான விதிமுறைகளையும் ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 7-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டம் மற்றும் இதுவரை ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

இதன் பின்னர் வழக்கு விசாரணை ஏப்ரல் 8-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.