தற்போதைய செய்திகள்

கொடிகாத்த குமரன் 116-வது பிறந்தநாள் விழா -அமைச்சர் மலர்த்தூவி மரியாதை

திருப்பூர்

திருப்பூர் கொடி காத்த குமரனின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கொடி காத்த குமரனின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் சென்னிமலையில் 04.10.1904 அன்று பிறந்தார். திருப்பூர் குமரன் ஆரம்பம் முதல் காந்தியடிகளின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். நாட்டு விடுதலைக்காக காந்தியடிகள் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 04.01.1932-ம் ஆண்டு காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது. இதனையொட்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

இதில் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி 10.01.1932-ம் ஆண்டு நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் திருப்பூர் குமரன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்போராட்டத்தில் போலீசாரின் தாக்குதலில் உடலிலும், தலையிலும் பலத்த காயமடைந்த போதிலும் தன் கையிலிருந்த கொடியை தரையில் சாய விடாமல் வந்தேமாதரம் என்ற முழக்கத்தை எழுப்பி தன் நாட்டுப்பற்றினை பறைசாற்றினார். திருப்பூர் குமரன் கீழே விழுந்த போதிலும் அவர் கையில் ஏந்தியிருந்த கொடியை தரையில் விழாமல் தன் மார்போடு சேர்த்து பிடித்திருந்தார். குருதி வெள்ளத்தில் இருந்த குமரன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11.01.1932-ம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டுச் சென்றார்.

இந்திய திருநாட்டின் விடுதலைக்காக போராடிய திருப்பூர் குமரனின் பிறந்த நாளான அக்டோபர் 4-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாடிட புரட்சித்தலைவி அம்மா 2015-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் திருப்பூர் குமரனின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, நேற்று திருப்பூர் ரயில்நிலையம் அருகில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள திருப்பூர் குமரனின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உருமலை கே.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், குமரன் மண்டபத்தில், மக்கள் பயன்பெறும் வகையில் படிப்பகம் துவங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த திருப்பூர் குமரன் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்களையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ( திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கேயம்), மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை ஆணையர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பா.ஜான் ஜெகத் பிரைட், ப.காந்தி (திருப்பூர் மாநகராட்சி) , உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சு.பாலாஜி (செய்தி), சதீஸ்குமார் ( விளம்பரம்), திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.