தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் பகுதியில் கட்டடங்களை வரன்முறை படுத்த நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி…

திண்டுக்கல்:-

கொடைக்கானல் பகுதியில் வரன்முறை இல்லாத கட்டடங்களை வரன்முறைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் வில்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பல்வேறு துறைகளின் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டியிருக்கும் முதலமைச்சர் ஏழை, எளியோர், விவசாயிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில், பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களின் மூலம் மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு, தமிழக அரசு 2019-2020ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.28,757.62 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையின் கூடுதல் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கென தமிழக அரசு 2019-2020-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.12,563.83 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறைக்கென, ரூ.10,550.85 கோடி மற்றும் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை மற்றும் நகர்புற வீட்டுவசதி மேம்பாட்டிற்கென ரூ.6,265.52 கோடி, நெடுஞ்சாலை-சிறு துறைமுகங்கள் மேம்பாட்டிற்கென ரூ.13,605.19 கோடி மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கென ரூ.18,273.96 கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், துறைக்கென ரூ.18,700.64 கோடி மற்றும் பெண்கள், குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சமூக நலத்துறைக்கென ரூ.5305.51 கோடியும், பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்கென ரூ.250 கோடியும் என இதுபோன்று, தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் மேம்பாட்டிற்கு அடிப்படையாக, 2019-2020-ம் ஆண்டின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கபெறும் வகையில், ஒரு சிறப்பான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, மேலும், கோரிக்கைகளுக்கு முன்பாகவே திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், கொடைக்கானல் பகுதியில் வரன்முறை இல்லாத கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்கென, நீதிமன்றத்தின் மூலம் சிலர் வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில், இன்றைய தினம் சில கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் கட்டட உரிமையாளர்கள், வணிகர்கள் ஆகியோர் அரசின் விதிமுறைக்குட்பட்டு, வரன்முறை படுத்துவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கைகள், அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடைக்கானல் பகுதியில் வரன்முறை இல்லாத கட்டடங்களை வரன்முறை படுத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ், வன அலுவலர் தேஜஸ்வி, அன்னை தெரசா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சுகந்தி, கொடைக்கானல் கோட்டாட்சியர்(பொ) சிவக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர், கொடைக்கானல் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.