சிறப்பு செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாறுவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

கோவை

கோவை மாவட்டம் கொரோனோ இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் சௌரிபாளையத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராமன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், கழக செய்தி தொடர்பாளர் மகேஸ்வரி, சிங்கை முத்து, சௌரிபாளையம் பகுதி கழக செயலாளர் மீசை வெள்ளிங்கிரி, கழக இலக்கிய அணி செயலாளர் புரட்சித்தம்பி, பாசறை பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ரவி, பிரபு, சங்கீதா உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சிங்காநல்லுர் தொகுதி மக்களுக்கு கோவை சவுரிபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராமன் ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், உப்பு, மஞ்சள், மசாலா பொடி, சோப்பு, கடுகு, சீரகம், டீத்தூள் உள்பட 19 பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், கழக அமைப்பு செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு 20 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவற்றில் மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் விரைந்து மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்கும் வகையில் கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி அளிக்கும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் நலனையும், அவர்களை சார்ந்த குடும்பத்தினர் நலனையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் ஒரு வகை வைரஸ் ஒற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் சேவைகளை பாராட்டும் வகையில் மாவட்ட கழகத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நலிவடைந்த குடும்பங்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கொரோனோ இல்லாத மாவட்டமாக மாறுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தங்குதடையின்றி தொய்வின்றி சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்வின் முடிவில் தேவாலயத்தின் போதகர் நன்றி கூறினார்.