தற்போதைய செய்திகள்

கொலைகார கும்பலுடன் கைகோர்ப்பதா? கம்யூ. வேட்பாளருக்கு அமைச்சர் கண்டனம்…

மதுரை:-

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பி.கே.மூக்கையாத்தேவர் சங்க சுமை தூக்கும் தொழிலாளர்கள், வடக்கு வாசல் சி.ஐ.டி.யு,சுமை தூக்குவோர் நலச்சங்க நிர்வாகிகள், விளாங்குடி அண்ணா சுமை தூக்குவோர் நலச்சங்கங்களை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வி.வி.ஆர்.ராஜ்சத்யனு -க்கு  ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் வழங்கினர்.

ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொழிலாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொழிலாளர்களின் நலனை எண்ணிப்பார்த்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், தொழிலாளர்களின் நலன்களை எண்ணிப்பார்த்து செயல்பட்டு வருகின்றனர். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகிய பல்வேறு நபர்களை உள்ளடக்கி அவர்களுக்காக ரூ.2000 உதவித்தொகை வழங்க தீர்மானம் நிறைவேற்றினார், அதற்கு தி.மு.க.வினர் முட்டுக்கட்டை போட்டனர். அதையெல்லாம் தகர்த்தெறிந்து அத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் முடிந்தபின் நிச்சயம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்யாதவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லீலாவதி தி.மு.க. செய்த முறைகேடுகளை தட்டிக்கேட்டார். அவரை நடுரோட்டில் தி.மு.க.வினர் வெட்டி படுகொலை செய்தனர். லீலாவதியை கொலை செய்தவர்களின் சகோதரரிடம் சி.பி.எம். வேட்பாளர் கைகோர்த்துள்ளார், இதைப்பார்த்து லீலாவதி குடும்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களும் வேதனையடைந்து வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் இயக்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கொள்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளாவில் ஒரு நிலைப்பாடு என்று மாநிலத்திற்குள்ளேயே பல கொள்கைகளை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என் மீது புகார் கொடுக்கிறது என்பதற்காக நான் உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது.

கழகத்துக்கு துரோகம் செய்த டி.டி.வி.தினகரனை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர் பரிசுப்பெட்டி சின்னத்தை தூக்கிக்கொண்டு ஊர், ஊராக சுற்றி வருகிறார். ஆனால் மக்கள் அவருக்கு ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதி கழகவேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், அமோக வெற்றி பெறுவார் . அதற்கு இங்கு எங்களுக்கு ஆதரவு அளித்த இந்த தொழிலாளர்களே சாட்சி.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.