நாமக்கல்

கொல்லிமலை வல்வில்ஓரி விழாவில் 989 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில்ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்கண்காட்சி விழாவில் 989 பயனாளிகளுக்கு ரூ.2.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியாமரியம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும் கொல்லிமலை வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று மலர்க்கண்காட்சியை துவக்கி வைத்தார்.

மலர்க்கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அன்னாசி, பலாப்பழம், பேரிக்காய், திராட்சை, மாதுளை, கொய்யா, கேரட், பப்பாளி, சாத்துகுடி உள்ளிட்ட பல்வேறு பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுர மாதிரியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும், மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட கொல்லிமலையில் விளையும் நறுமணப்பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பெண் சிலையை பார்வையிட்டார்.

தொடர்ந்து பல்வேறு மலர்கள் மற்றும் பல்வேறு பழங்களை வரிசைபடுத்தி அமைக்கப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். பின்னர் வல்வில் ஓரி அரங்கில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவும், விளக்கமளிப்பதற்காகவும் 20-க்கும் மேற்பட்ட துறைகளை கொண்டு அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து வல்வில்ஓரி திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61,620 மதிப்பிலான சக்கர நாற்காலிகள், மோட்டர் பொருந்திய தையல் இயந்திரம், ஊன்றுகோல்கள், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், 51 பயனாளிகளுக்கு ரூ.72.93 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட கடனுதவி, 13 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 5 பயனாளிகளுக்கு ரூ.14.70 லட்சம் கறவை மாடு கடன் உதவி, 469 பயனாளிகளுக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை,

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, நிலவரித்திட்ட பட்டா, பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள், 10 விவசாயிகளுக்கு ரூ.84,800 நலத்திட்ட உதவிகள், 7 விவசாயிகளுக்கு ரூ.1.58 லட்சம் நலத்திட்ட உதவி, 415 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.1.91 கோடி கடனுதவி, 5 கலை விருதாளர்களுக்கு ரூ.55,000-க்கான விருது காசோலைகள் என மொத்தம் 989 பயனாளிகளுக்கு ரூ.2,83,74,478 நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியாமரியம் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா, சார் ஆட்சியர் கிராந்திகுமார் பதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொ.பாலமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் பா.ஹேமநாதன், சுற்றுலாத்துறை அலுவலர் த.ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பயனாளிகள் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.