சிறப்பு செய்திகள்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.428 கோடியில் கதவணை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம், ஆதனூர் கிராமம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் கிராமம் ஆகியவற்றிற்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 74/3–வது மைலில் தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டினை திறந்து வைத்து, 22 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 4.8.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில், மழைக்காலங்களில் காவேரியில் வரப் பெறும் வெள்ள நீரைத் திருப்பி விடுவதற்காக, கொள்ளிடம் ஆறு பிரதானமாக ஒரு வெள்ள நீர்ப் போக்கியாக செயல்பட்டு வருவதால், இந்த ஆற்றில், கீழணை, அதாவது Lower Coleroon Anicut தவிர, எந்த ஒரு பாசன கட்டுமானமும் இல்லாததால், மழைக் காலத்தில் கிடைக்கும் வெள்ள நீர் கீழணைக்கு கீழ்புறம் சென்று கடலில் வீணாக கலப்பதால், அதனைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மாவட்டம், ஆதனூர் கிராமம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் கிராமம் ஆகியவற்றிற்கு இடையே கீழணையின் கீழ்புறம் தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டப்பட்டும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, நீர்வள ஆதாரத் துறை சார்பில் 428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம், ஆதனூர் கிராமம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் கிராமம் ஆகியவற்றிற்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 74/3–வது மைலில் தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக 396 கோடியே 41 லட்சம் ரூபாயும், நில எடுப்பு பணிகளுக்காக 31 கோடியே 35 லட்சம் ரூபாயும், நில அளவை பணிகளுக்காக 24 லட்சம் ரூபாயும், என மொத்தம் 428 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 82 மதகுகளை கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த கதவணையில், 0.334 டி.எம்.சி. கொள்ளவுடன், ஆண்டிற்கு நான்கு முறை நிரம்பும் என்ற கணக்கீட்டில், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.072 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் ஆதனுர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களை இணைப்பதற்கான இரு வழிப்பாதை பாலம், வடக்குராஜன் மற்றும் தெற்குராஜன் கால்வாய்களுக்கு நீர் வழங்குவதற்கு ஏதுவாக புதிய இரு தலை மதகுகள், நரிமுடுக்கு மற்றும் கொண்டப்பன் காவேரி வடிகால்களின் வெள்ள நீரை கதவணையின் கீழ்புறமாக கொள்ளிடம் ஆற்றில் சேர்ப்பதற்கான கட்டடமைப்பு வசதிகள், கதவணையின் மேற்புறத்தில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் ஆகியவற்றையும் செயல்முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், வெள்ள காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் சென்று கலக்கும் நீரினை சேமித்து, ஏற்கனவே கீழணையின் மூலம் பாசனம் பெற்று வந்த வடக்குராஜன் மற்றும் தெற்குராஜன் கால்வாய்களில் உள்ள 12,640 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு உறுதியான பாசன வசதி அளிக்க இயலும். இதனால் கீழ் அணையில் சேமிப்பாகும் நீரினை கொண்டு சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு கூடுதல் குடிநீர் புதிய வீராணம் திட்டத்தின் மூலம் வழங்க இயலும். மேலும், இக்கதவணையில் நீரினை தேக்குவதால் அணையை சுற்றியுள்ள 307 ஆழ் குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் மூலம் கூடுதலாக 4425 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், செய்யாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், அனுமன் நதியின் குறுக்கே 5 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 தடுப்பணைகள், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், உப்போடை ஆற்றின் குறுக்கே 2 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை அருகில் குழித்துறையாற்றின் குறுக்கே 15 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை, என மொத்தம் 22 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் எம்.பக்தவத்சலம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.