தற்போதைய செய்திகள்

கோடியக்கரையில் ரூ.1.50 கோடியில் மீன்ஏலக்கூடம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்…

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கோடியக்கரை ஊராட்சியில் மீன்வளத்துறை சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கோடியக்கரை ஊராட்சியில் மீன்வளத்துறை சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

“புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலுடன் தமிழக அரசு மீன்பிடித் தொழிலில் ஏற்படும் இன்னல்களை களையும் பொருட்டும், மீனவ மக்களின் துயர்களை நீக்கி, சமூகப் பொருளாதார முன்னேற்றத்தினை காணும் பொருட்டும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் ஏலக்கூடம் 20 மீட்டர் நீளம் மற்றும் 14 மீட்டர் அகலமுள்ளதாகவும், மீன்பிடி வலைகளை பழுதுபார்க்கும் வலை பின்னும் கூடம் 20 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலமுள்ளதாகவும் கட்டப்பட்டுள்ளது. மேலும் மின்வசதி, தண்ணீர் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீனவர்கள் மீன் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியும். கடலோர மீன் வளர்ப்பை ஊக்குவிக்க நிலையான சூழல் உருவாகும். மேலும், சுகாதாரமான முறையில் மீன் பிடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், ஏதுவாக அமையும். இதன் வாயிலாக இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை செயற்பொறியாளர் பிராமநாதன், தேத்தாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.கிரிதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.