தற்போதைய செய்திகள்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.224.10 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்…

கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளம் அருகில் நடைபெற்ற விழாவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.224.10 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில், முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து சாலைகள் மேம்படுத்தப்பட்டும், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், லட்சுமி மில்ஸ் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம், அரசு கல்லூரிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகளில் எல்இடி விளக்குகளாக மாற்றியமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல், வீட்டுமனை பட்டாக்கள் வழங்குதல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்து 50 ஆண்டுகள் காணாத வளர்ச்சி கோவையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும் ரூ.1652 கோடியில் 3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 70 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்கும் வகையில் வரலாற்று சாதனையாக அத்திக்கடவு, அவினாசி குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ரூ.290 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திறன்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பெரியகுளத்தின் கரையை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் ரூ.62 கோடியே 17 லட்சம் மதிப்பிலும், செல்வசிந்தாமணி குளத்தின் கரையை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் ரூ.31 கோடியே 47 லட்சம் மதிப்பிலும், ஆர்.எஸ்.புரம் திவான்பகதூர் சாலையில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் அமைத்திட ரூ.40 கோடியே 78 லட்சம் மதிப்பிலும், எல்இடி விளக்குகள் அமைத்தல் பணிகள் ரூ.74 கோடியே 70 லட்சம் மதிப்பிலும், சிவராம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்தல் பணிகள் ரூ.14 கோடியே 98 லட்சம் மதிப்பிலும் ஆகமொத்தம் ரூ.224 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவங்கிவைக்கப்பட்டுள்ளது.  கோயம்புத்தூர் மாநகராட்சி, இந்தியாவில் முன்னோடி மாநகராட்சியாக திகழ்ந்திட தமிழக அரசு இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை.ஏ.சண்முகம், ஆர்.கனகராஜ், மாநகரப்பொறியாளர் ஏ.லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.