தற்போதைய செய்திகள்

கோவளத்தில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவி : மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்- மரகதம் குமரவேல் எம்.பி. வழங்கினர்…

திருப்போரூர்

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கோவளம் மற்றும் கானத்தூர் பகுதிகளில் கழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி கோவளம் பாஸ்கர், யாஸ்மின் பாஸ்கர் ஆகியோர் ஏற்பாட்டில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான மரகதம் குமரவேல், தலைமை கழக பேச்சாளர் கரூர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு 3000 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி்களை வழங்கினர். 1000 பேருக்கு புடவை, 1000 பேருக்கு சுவர் கடிகாரம், 5 பேருக்கு தையல் எந்திரம், 3 பேருக்கு அயர்ன் பாக்ஸ், 4 அணிக்கு கிரிக்கெட் உபகரணங்கள், 1 அணிக்கு வாலிபால் உபகரணங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், திருமண நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மரகதம் குமரவேல் எம்.பி. பேசியதாவது:-

நாம் சாப்பிடுகின்ற உணவை கடவுளுக்கு சமம் என்று நினைக்கின்றோம். அந்த வயல் வெளியில் காலணியை போட்டு யாராவது செல்வார்களா? ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வயல் வெளியில் திடீர் சாலை அமைத்து காலணி அணிந்து சென்றார். இது விவசாய மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர் எப்பொழுது தேர்தல் வந்தாலும் நடைபயணம் செல்வது, ஊர்ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்துவதையும், கழக அரசு மீது குறை கூறுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவற்றை முதல்வர் தூள் தூளாக்குவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு மரகதம் குமரவேல் எம்.பி. பேசினார்.

தலைமை கழக பேச்சாளர் கரூர் சுந்தரம் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்வரும் துணை முதல்வரும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி அறுபத்தி நான்கு அடி பாயும். பெண்ங்களுக்கு அதிமான நலத்திட்டங்களை கழக அரசு வாரி வழங்குகிறது. இதனால் மக்கள் மத்தியில் கழக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறி வருகிறார் என்றார்.

இந்நிகழ்ச்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாவலூர் முத்து, ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட கழக துணை செயலாளர் யஸ்வந்த்ராவ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தீனதயாளன், மாவட்ட மீனவர் அணி தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.