தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் ரூ.18 கோடியில் விரைவில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடக்கம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்…

தூத்துக்குடி:-

கோவில்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் ேநற்று நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டசத்து பெட்டகம், பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தினார். தேர்தலின் போது, சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். மேலும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிட கல்வித்துறையை முன்னேற்றினால்தான் மற்ற அனைத்து துறைகளும் முன்னேறும் என்ற அடிப்படையில் இந்தியாவில் எந்த அரசும் செய்திடாத வகையில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார்.

தமிழக மக்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் வசதி படைத்த மக்களுக்கு கிடைக்கும் அதே மருத்துவம் ஏழை, எளிய மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தினை கொண்டுவந்து செயல்படுத்தினார். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார்.

அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அம்மா ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக மருத்துவ கல்லூரிகளையும் தொடங்கி வைத்தார்கள். கோவில்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் செவிலியர் பயிற்சி கல்லூரி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் மருத்துவ துறையில் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை பார்வையிட்டுள்ளார். குறிப்பாக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்துவது குறித்து பார்த்துள்ளார். விரைவில் இத்திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் மேலும், கால்நடை அபிவிருத்தி, பால் உற்பத்தி அதிகரித்தல் தொடர்பான திட்டங்களையும் பார்வையிட்டுள்ளார்.

தமிழக அரசு கருவறை முதல் கல்லறை வரையிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சமுதாய வளைகாப்பு திட்டம், மகப்பேறு சஞ்சீவ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தாயும், சேயும் நலமுடன் இருக்கும் வகையில் சிந்தித்து செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது. கயத்தாறு பகுதிக்கென தனி வட்டம் உருவாக்கப்பட்டு அதற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கயத்தாறு தாலுகாவாக உயர்த்தப்பட்டுள்ளதால் இங்குள்ள மருத்துவமனையும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். மேலும் போக்குவரத்துத்துறையின் மூலம் பஸ் டிப்போவும் இங்கு உருவாக்கப்படும்.

மேலும் இங்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். சத்தான உணவுகள் எது என்பதை பொது மக்கள் அறிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தேசிய ஊட்டசத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் வாழ வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, கோவில்பட்டி வட்டாட்சியர் பாஸ்கரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் க.சுந்தரலிங்கம், யமுனா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கணேஷ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.