தமிழகம்

கோவையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன லூம்வேர்ல்டு விற்பனை நிலையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.2.2020 அன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான மதுரை, மேலமாசி வீதியிலுள்ள காதி கிராப்ட் கட்டடத்தை 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட “காதி மார்ட்” கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

2017-18-ம் ஆண்டிற்கான கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் மானியக் கோரிக்கையில், கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையத்தின் உள் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் தோற்றங்களை மறுசீரமைத்து, வாடிக்கையாளர்களை பெருமளவில் ஈர்க்கவும், கைத்தறி ரகங்களின் விற்பனையினை அதிகரிக்கவும் நவீனமயமாக்கப்படும் என்றும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் மதுரை மாநகரில் தற்போது செயல்பட்டு வரும் காதி கிராப்ட் கட்டடம் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய “காதி மார்ட்” என்ற பெயரில் நவீனமயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் அமைந்துள்ள லூம்வேர்ல்டு விற்பனை நிலையத்தின் தோற்றங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன் தரைத்தளத்தில் பட்டு மற்றும் பருத்தி ரக விற்பனை பிரிவு, முதல் தளத்தில் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் ஆடவர் ஆடை ரகங்கள் விற்பனை பிரிவு, அழகிய உள் அலங்கார வேலைப்பாடுகள், குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையம்,

1921-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22-ம் நாள், மதுரை, மேலமாசி வீதியிலுள்ள இந்த காதி கிராப்ட் கட்டடத்தில் தான், வறுமையில் வாடித்தவிக்கும் பாமர மக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்தும் வகையில், அண்ணல் காந்தியடிகள் அரை ஆடை உடுத்தும் விரதத்தை துவக்கி அன்று முதல் கடைபிடித்தார்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மதுரை, மேலமாசி வீதியிலுள்ள காதி கிராப்ட் கட்டடம், அதன் பழமை மாறாமல் தற்போது சீரமைக்கப்பட்டு, புதிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள கதர் மற்றும் கிராமப் பொருட்கள் விற்பனை வளாகம், நவீன மர அலமாரிகள், ஜெனரேட்டர், குளிர்சாதன வசதி, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட “காதி மார்ட்” கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் க.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனைவர் மு.கருணாகரன், தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் கி.சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.