தற்போதைய செய்திகள்

கோவை அரசு- ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ரூ.30.70 கோடி மதிப்பில் புதிய நவீன கருவிகள் – அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி- டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தனர்…

கோவை, பிப்.26-

கோவை அரசு மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ரூ.30.70 கோடி மதிப்பில் புதிய நவீன கருவிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 23.02.2019 அன்று ரூ.6.5 கோடி மதிப்பில் ஆஞ்சியோகிராம் கருவி, ரூ.1 கோடி மதிப்பில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் ரூ.1.80 கோடி மதிப்பில் 16 சிலைஸ் சி.டி. ஸ்கேன் மையம் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பில் நவீன சமையல் கூடம் என ரூ.30 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய கருவிகளை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் கோவை மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுகாதாரத்துறைக்கு அதிக அளவிலான நிதிஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரால் ரூ.280 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டடங்கள் மற்றும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இருதய அறுவை சிகிச்சை, சீறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கு மதுரை மற்றும் சென்னை செல்ல வேண்டியிருந்தது.

கடந்த வருடம் சுகாதாரத்துறை அமைச்சர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் கருவியால் 1700 பேருக்கு ஆஞ்சியோகிராம், 450 பேருக்கு ஸ்டன்டு மூலம் இருதய சிகிச்சையும், 83 பேருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மூளையில் அடைப்பு மற்றும் விபத்துக்கள் நடக்கும் பொழுது அதிகமான இரத்த கொதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழப்பு ஏற்படும்போது 6 மணி நேரத்தில் விபத்துக்குள்ளனவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பற்றவதற்கு இன்று ரூ.6.5 கோடி மதிப்பிலான ஆஞ்சியோகிராம் கருவி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இச்சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்யும் பொழுது ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவாகும். இக்கருவியின் மூலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களும் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய அளவில் தனியார் மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாநகரில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனை 1970-ம் ஆண்டு துவங்கப்பட்டது. கோயம்புத்தூர் நீலகிரி, ஈரோடு திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த 40 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர். ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொழிலாளர்களுக்காக 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் லெப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவுகளும், கண், காது, மூக்கு பொது மருத்துவப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஈ.எஸ்.ஐ மருத்துவமனை 02.02.2016 அன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதனைகள் பல புரிந்து பல்வேறு பரிசுகளை வென்று சாதனை புரிந்துள்ளனர்.

05.08.2016 அன்று 100 மாணவர்களுடன் இக்கல்லூரி தொடக்கப்பட்டு தற்போது 300 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயின்று வருகின்றனர். நான்காம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று ரூ1.80 கோடி செலவில் அதி நவீன சி.டி.ஸ்கேன் கருவி, ரூ.40 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நவீன சமையல் அறை கூடம் ஆகியவை தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. இதன்மூலம், மேற்கு மண்டலத்தை சார்ந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த மாதம் இந்த கருவி தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதற்கடுத்தப்படியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குதான் இக்கருவி வழங்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூர் மாவட்டம் மிகப்பெரிய மருத்துவ தலைநகரமாக உருவாகியுள்ளது. சைக்கா திட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூ.275 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.98 கோடி மதிப்பில் கட்டடம், ரூ.11கோடி மதிப்பீட்டிலான மகபேறுக்கான சீம்பால் சிகிச்சை பிரிவு, ரூ.7 கோடி மதிப்பில் விபத்து காயசிகிச்சை பிரிவு, வாஸ்குலார் சிகிச்சை பிரிவு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. வாஸ்குலார் சிகிச்சை மேற்கொள்ள மதுரை அல்லது சென்னை பகுதிகளில் மட்டுமே செல்லவேண்டிய நிலை இருந்தது. மேலும், ஆர்த்தோ துறை இன்று ஆர்த்தோ இயக்குநரகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு உடனடியாக மருத்துவகல்லூரி முதல்வர் மற்றும் 800 பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று 05.08.2016 அன்று 100 மாணவர்களுடன் கல்லூரி துவங்கப்பட்டது. அதில் 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில், 15 இடங்கள் மத்திய ஒதுக்கீட்டில், 20 இடங்கள் ஈ.எஸ்.ஐ பயனாளிகளின் குழந்தைகளுக்கும் என நிரப்பப்படுகிறது.

இதுவரை 300 மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்கள். அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம் மருத்துவமனையில் 21 சேவை துறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 10 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், மருத்துவ, இதய, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய, பச்சிளம்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் அனைத்து விதமான நவீன கருவிகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் போது ஏற்படும் காயங்களை குணப்படுத்த பிரத்யேக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களும் எலும்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. தற்போது ரூ.1.80 கோடி செலவில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் துணையுடன் அதி நவீன சி.டி ஸ்கேன் கருவி, ரூ.40 இலட்சம் மதிப்பில் செலவில் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சமையலறை நிறுவப்பட்டுள்ளது. அதி நவீன சி.டி ஸ்கேன் கருவி மற்றும் நவீனமயமாக்கப் பட்ட சமையலறையின் மூலம் ஈ.எஸ்.ஐ பயனாளிகள் குடும்பத்திற்கு 24 மணி நேரமும் இலவசமாக பயன்பாட்டிற்கு வருகிறது. மேலும், நவீனமயமாக்கப்பட்ட சமையலறை மூலம் நோயாளிகளுக்கு உடனுக்குடன் தேவையான சரிவிகித சத்தான உணவுகளை அவர்கள் நோய்க்கு ஏற்றார் போல் வழங்க பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தாளியூர் பேரூராட்சி, பூச்சியூரில் ரூ.60.00 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஸ்ரீராம் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.42.00 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுகாதார மைய கட்டிடத்தையும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி, செம்மேடு பகுதியில் ரூ.72.00 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை துவக்கி வைத்தும், சுண்டக்காமுத்தூரில் 30 படுக்கைவசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், காவல் ஆணையாளர் சுமித்சரண், மருத்துவக்கல்வி இயக்குநர் மரு.யு.எட்வின் ஜோ, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் மரு.ப.சுவாமிநாதன், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.