கோவை

கோவை-பொள்ளாச்சியில்வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு…

கோவை

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 18ம்தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியிலும், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கோவை தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1692 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கோவை நாடாளுமன்ற தொகுதியில் 2045 வாக்குச் சாவடிகளில் 2605 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு சட்டமன்றம் வாரியாக, தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட்டன. இதையடுத்து கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கு.ராசாமணி, தேர்தல் பொது பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் சீல் வைத்தனர்.

இதேபோல் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் (பொது) சுபீர்குமார், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் முதன்மை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிகுமார் ஆகியார் முன்னிலையில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டப் பேரவை தொகுதி வாரியாக ஆறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.