தற்போதைய செய்திகள்

கோவை மாவட்டத்தில் 33 புதிய பேருந்துகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்…

கோவை

கோவை மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் 33 புதிய பேருந்துகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, 16.02.2019 அன்று ரூ.8.25 கோடி மதிப்பிலான, 33 புதிய அரசுப் பேருந்துகளை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருவதுடன், அனைத்து துறைகளிலும், புதுமைகள் பல புகுத்தி நவீனப்படுத்தியும் வருகின்றார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த 2016-2017-ஆம் ஆண்டிற்கு 2100 புதிய பேருந்துகள் ரூபாய் 429.97 கோடி செலவில் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு 430 பேருந்துகள் ரூ.83.22 கோடி செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 215 பேருந்துகள் கடந்த 3.07.2018 மற்றும் 10.10.2018 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் சென்னையில் துவக்கிவைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது கட்டமாக, மீதமுள்ள 215 பேருந்துகளில் 140 பேருந்துகள் 7.1.2019 அன்று முதலமைச்சரால் சென்னையில் துவக்கப்பட்டு அதில் கோயம்புத்தூர் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட 42 பேருந்துகள் கோயம்புத்தூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 10.01.2019 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இப்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள 33 புதிய அரசுப் பேருந்துகள், கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து, பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், மதுரை, தேனி, சிவகாசி, உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒ.கே.சின்னராஜ், எட்டிமடை எ.சண்முகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி துணைஆணையர் காந்திமதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர்கள் கோவிந்தராஜ், வீரமணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை பொதுமேலாளர் சாய்கிருஷ்ணன், மண்டல போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் சி.டி.சி சின்னராஜு, கழக நிர்வாகிகள் ரங்கராஜ், லீலாவதி உண்ணி, பப்பாயா ராஜேஷ், கோவை பாரதி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.