தமிழகம்

கோ- ஆப்டெக்ஸ் செயல்பாடுகளை கணினி மயமாக்க புதிய திட்டம் – முதலமைச்சர் துவக்கி வைத்தார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.3.2019 அன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப்டெக்ஸ்) அனைத்து செயல்பாடுகளையும் 15 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணினிமயமாக்கும் “இன்போடெக்ஸ்” திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இது குறித்த அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களின் தாய்ச்சங்கமாக நிறுவப்பட்டு 84 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமாக விளங்கிவரும் கோ-ஆப்டெக்ஸ், இந்தியா முழுவதும் உள்ள தனது 177 விற்பனை நிலையங்கள் மூலமாக கைத்தறி துணி ரகங்களை விற்பனை செய்து வருகிறது. இதில் 120 விற்பனை நிலையங்கள் தமிழ்நாட்டிலும், 57 விற்பனை நிலையங்கள் வெளிமாநிலங்களிலும் அமைந்துள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளான, நெசவாளர்கள் தயாரிக்கும் துணிகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்தல், கொள்முதல் செய்யப்பட்ட துணிகளை கோ-ஆப்டெக்ஸ் சேமிப்பு கிடங்குகளில் சேமித்தல், கோ-ஆப்டெக்ஸ் சேமிப்பு கிடங்குகளிலிருந்து துணிகளை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தல், இறுதியாக வாடிக்கையாளர்களுக்கு அத்துணிகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்க திட்டமிடப்பட்டது.

இந்த இலக்கினை எய்துவதற்கு, வடிவமைப்புகளில் புதுமை செய்தல், கணக்குகளை நேர்த்தியாக கையாளுதல், புதிய ரகங்களை உற்பத்தி செய்தல், ரகங்களில் “QR Code” முறையைக் கொண்டு வருதல், குறிப்பிட்ட காலத்திற்குள் இரகங்களை வழங்குதல் போன்ற கோ-ஆப்டெக்ஸ் நிறுவன பணிகளை கணினிமயமாக்குதலுக்காக, மத்திய அரசின் மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறையால் மானியமாக அனுமதிக்கப்பட்ட 15 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான “இன்போடெக்ஸ்” மென்பொருள் பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்பயனாக, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு குறித்த காலத்திற்குள் பணப்பட்டுவாடா செய்யவும், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும், வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து புதிய வடிவமைப்புகளை விரைந்து அறிமுகப்படுத்தவும், கைத்தறி ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தவும் இயலும்.

நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் ச.முனியநாதன், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் டி.என். வெங்கடேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.