தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2.50 கோடி கடன் உதவி – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்…

திருநெல்வேலி:-

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 91 உழைக்கும் மகளிர்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய தொகை மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பில் 41 மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 91 உழைக்கும் மகளிர்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய தொகைக்கான காசோலைகள் மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பில் 41 மகளிர் சுயஉதவிக்குழுக்கான கடன் உதவிகளை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் முன்னிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-

உழைக்கும் மகளிர் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கும் பிற இடங்களுக்கும் சென்று வர வசதியாக இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 50 சதவீத மானியம் வழங்கி வரும் திட்டமே அம்மா இருசக்கர வாகனம் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மகளிருக்கு 21 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், மாற்றுத்திறனாளிக்கும் 4 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மகளிரை குடும்பத்தலைவியாக கொண்ட மகளிர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், 35 வயதுக்கு மேல் திருமணமாகாதவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டிற்கு 4455 இருசக்கர வாகன ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் சட்டமன்ற தொகுதி வாரியாக 3653 இருசக்கர வாகனங்கள் உழைக்கும் மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 91 மகளிருக்கு தலா ரூ.25000 வீதம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது வாழ்வாரத்தை பெருக்கி வருவதோடு சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க 787 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 11573 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 567.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் 41 சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு வகையான தொழில் செய்வதற்கு வங்கிக் கடனாக தொகை ரூ.2.50 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு சுயஉதவிக்குழுக்கள் தங்களது வாழ்வாரத்தை மேலும் உயர்த்தி பயனடைய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளாச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி மகளிர் திட்ட அலுவலர் அந்தோணி பெர்னாண்டோ, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் குருமூர்த்தி, முக்கியபிரமுகர்கள் கண்ணன் (எ)ராஜீ, ரமேஷ், சுப்பையாபாண்டியன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.