சிறப்பு செய்திகள்

சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் : முதலமைச்சர் பெருமிதம்…

திருநெல்வேலி:-

சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 03.04.2019 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை, சாத்தான்குளம் காமராஜர் சிலை ஆகிய பகுதிகளிலும், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து திசையன்விளை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளோடு இணைந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். தற்போது 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைப்பது உறுதி. இந்த நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல, வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி உறுதி. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சி மூன்று மாதத்தில் கலைந்து விடும், ஆறு மாதத்தில் கலைந்து விடும் என்று தவறான கணக்கு போட்டார். ஆனால், மக்களின் பேராதரவோடு எனது தலைமையிலான அம்மாவின் அரசு இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருக்கின்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலாவது சிறந்த காவல் நிலையமாகவும், அண்ணா நகர் காவல் நிலையம் ஐந்தாவது சிறந்த காவல் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதற்கு இதுவே சான்று.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் தான் இருக்கும். தற்போது பிரியாணி கடை, அழகு நிலையங்கள், செல்போன் கடை போன்ற இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதச் செயல்களில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போதே இப்படி என்றால், அவர்கள் ஆளும்கட்சியாக வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி எதிர்கட்சித்தலைவர் பேசுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. 1989ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அம்மா அவர்களை ஒரு பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்திலேயே தாக்கி அவமானப்படுத்தினார்கள். ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவருக்கே அதுவும், சட்டமன்றத்திலேயே ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருந்தது. இவர்கள் மீண்டும் தற்போது ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இவர்களா பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவது, அதைப்பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. இதை தாய்மார்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏழை, எளிய, சிறுபான்மையின மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்ற ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க தான். கற்பனையான குற்றச்சாட்டு சுமத்துவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாரும் இல்லை. இந்தியாவிலேயே கொலை, கொள்ளை, திருட்டு வழக்கில் ஈடுபடுபவர்களை ஜாமினில் எடுப்பதும், அவர்களுக்காக நீதிமன்றத்திலே வாதாடுவதும், கூலிப்படைக்கு உதவி செய்வதும் என்று ஒரு கட்சி இருக்குமேயானால், அது தி.மு.க. மட்டும் தான்.

தி.மு.க. அளித்துள்ள தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கையாகும். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது. கடந்த 2006ஆம் ஆண்டு அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதை எத்தனை பேருக்கு வழங்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த தேர்தலில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தற்போது மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.428 கோடி செலவில் 3000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.

பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அதேபோன்று காவிரி – கோதாவரி இணைப்புத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே தடையில்லா மின்சாரமும், 100யூனிட் வரை இலவச மின்சாரமும் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

ஸ்ரீ வைகுண்டம் பகுதி மேம்பாட்டிற்காக ரூ.1.75கோடி செலவில் தார்சாலை, ரூ.2 கோடி மதிப்பில் தாலுகா அலுவலகம், ரூ.10 கோடி செலவில் புதிய உயர் மட்ட பாலம் உட்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக மக்களின் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டும் வரும் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, மத்தியில் ஒரு நல்லாட்சி மலர்ந்திட தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.