இந்தியா மற்றவை

சபரிமலைக்குச் செல்ல முயன்ற 10 பெண்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்

சபரிமலைக்குச் செல்ல முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்களை போலீஸார் பம்பை நகரில் தடுத்து நிறுத்தி, அவர்களைத் திருப்பி அனுப்பினர். இவர்கள் அனைவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாள அட்டை மூலம் போலீஸார் உறுதி செய்தபின் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

சபரிமலை மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் பக்தர்களின் மண்டல விரத காலம் முறைப்படி தொடங்குகிறது.சபரிமலையில் உள்ள கடவுள் ஐயப்பன்  பிரம்மச்சாரி என்பதால், பாரம்பரியப்படி 10 வயது முதல் 50வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால், அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதைத் எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் அதை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இருப்பினும் கடந்த ஆண்டு அறிவித்த தீர்ப்பை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பெண்களைச் சபரிமலைக்கு அனுமதித்தால் பல்வேறு பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கேரள அரசும், போலீஸாரும் எதிர்கொண்டார்கள். ஆதலால், இந்த ஆண்டு விளம்பர நோக்கில் பெண்கள் சபரிமலைக்கு வந்தால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாது என்று தேவஸம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். நீதிமன்ற ஆணையுடன் வந்தால் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்

இதனால், பத்திணம்திட்டா மாவட்டத்தில் மண்டல பூஜை காலத்தில் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பம்பை அடிவாரப் பகுதியில் பக்தர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ஆந்திராவில் இருந்து பக்தர்கள் குழுவினர் வந்தார்கள்.
அவர்களை மறித்து போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அந்த பக்தர்கள் வந்த பேருந்தில் இருந்த பெண்களிட் போலீஸார் விசாரணை நடத்தி அடையாள அட்டையை ஆய்வு செய்தனர். அதில் 10 பெண்கள் 50 வயதுக்கு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண்களை மகளிர் போலீஸாரின் பாதுகாப்பில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் கோயிலின் பாரம்பரியம், பழக்கம், போன்றவை தங்களுக்கு தெரியாது என அந்த பெண்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த பெண்களுடன் வந்த பக்தர்களை போலீஸார் சபரிமலைக்குச் செல்ல அனுமதித்தனர். மற்ற பெண்களையும் போலீஸார் பம்பையில் உள்ள போலீஸார் பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்தனர்.