இந்தியா மற்றவை

சபரிமலையில் நாளை நடை திறப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு..

திருவனந்தபுரம்:-

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த தடை விலகி உள்ளது.

அதேசமயம் சபரிமலையில் காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகத்தை மீறக்கூடாது என்று கூறி அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனமும் செய்தனர்.

இதனால் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களை அவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை மாசிமாத பூஜைக்காக நாளை (12-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கணபதி ஹோமம் நடக்கிறது.

தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.மாசி மாத பூஜையின் போதும் சபரிமலைக்கு இளம்பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதைத் தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல், நடைப்பந்தல் போன்ற பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சன்னிதானத்தில் எஸ்.பி. அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்.பி. மஞ்சு நாத் தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்.பி. மது தலைமையிலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.மேலும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர். காலை 10 மணிக்கு பிறகே பக்தர்கள் நிலக்கலில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலையில் போராட்டம் நடத்தினால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர். இதனால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.