தற்போதைய செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு : திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை தகவல் தொழில்நுட்ப பிரிவு மனு…

கோவை

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தி வரும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராஜாமணியிடமும், காவல்துறை துணை ஆணையரிடமும் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக குறிப்பிட்டு ஒரு பெண் புகார் கொடுத்ததின் பேரில் காவல்துறையால் உடனடியாக விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட சம்பவம் குறித்து திமுகவினர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் கழக அரசு செய்த நலத்திட்டங்கள் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் கழக அரசு அனைத்து அடிப்படைத் தேவைகளையும் மக்களுக்கு பூர்த்தி செய்து செய்து கொடுத்துள்ளது.இதனால் தோல்வி பயத்தில் உள்ள திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் தோற்று விடுவோம் என்ற பயத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது அவதூறு பரப்பி உண்மைக்கு மாறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியும், ஆளும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவைச் சேர்ந்த சூலூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ரஞ்சித் குமார் மற்றும் எஸ்.தண்டாயுதபாணி ஆகியோர் வலைத்தளத்தை தவறான முறையில் பரப்பி வருகின்றனர்.

மேலும் அவர்களது முகநூல் பக்கங்களில் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், உண்மைக்கு மாறான செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர்.ஆகவே தற்போது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் தவறான முறையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வரும் மேற்கண்டவர்கள் மீதும் தவறான தகவல் பரப்பி வருபவர்கள் மீதும் உரிய விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் தலைமையில், மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் பப்பாயா ராஜேஷ், கே.பி.எஸ்.ராஜா, பாலமுரளி, சாய்கணேஷ், சரவண பொஹரா, கே.சி.ஆ.செல்வகுமார், பிரபுராம், அருண்கிஷோர், ரியாஸ்கான், லட்சுமணன் சுந்தரராஜ், மாயாதேவி, அர்ச்சனா, சுரேஷ், சேகர், ஹரி, தினேஷ்,யோகேஸ்வரன், ராம்குமார், சதீஷ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மனு கொடுத்தனர்.