தமிழகம்

சயன கோலத்தில் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு – நாளை முதல் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்….

சென்னை :-

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1 முதல் கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதருக்கு மஞ்சள் நிற பட்டாடை, மல்லிகை, சம்பங்கி ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

30-ம் நாளான நேற்று ஒரே நாளில் சுமார் 2.50 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை அத்திவரதரை 43 லட்சம் பக்தர்கள் தரிசித்து உள்ளனர்.இன்று 3 மணிக்கு விஐபி தரிசனமும், மாலை 5 முதல் பக்தர்களின் தரிசனமும் நிறுத்தப்பட்டது. அத்திவரதரை நின்றகோலத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் வரும் ஆகஸ்டு 17 வரை காட்சி தருகிறார்.

நாளை காலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசிக்கலாம்.அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல் நாளில் தரிசிப்பதற்காக காஞ்சீபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள லாட்ஜூகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி விட்டன.கோவில் வளாகத்திலும் திரளான பக்தர்கள் காத்து கிடக்கிறார்கள். இதனால் கோவில் முழுவதும் மனித தலைகளாக காட்சியளிக்கிறது. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்ய உள்ளனர்.

நாளை வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுவதால் கோவிலில் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை தடுக்க குறிப்பிட்ட அளவில் பக்தர்களை நிறுத்தி நிறுத்தி கோவிலுக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.