தற்போதைய செய்திகள்

சரவணம்பட்டி முதல் மைசூர் வரை ரூ.1500 கோடியில் புறவழிச்சாலை – சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தகவல்

கோவை

சரவணம்பட்டி முதல் மைசூர் வரை ரூ.1500 கோடியில் புறவழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 1261 பயனாளிகளுக்கு ரூ.5.85 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேசியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அன்னூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரூ.240 கோடி மதிப்பில் அவினாசி, அன்னூர், மோப்பேரிபாளையம் ஆகிய பகுதிகளை இணைத்து குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மின்மயானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சரவணம்பட்டி முதல் மைசூர் வரை புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.1500 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 52 ஊராட்சிகளை இணைத்து அன்னூர், அவினாசி பகுதிகளில் பொதுவாக ஒரு கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் அன்னூர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை என்பதே இனிமேல் இருக்காது.

இவ்வாறு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.

இம்முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன், அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்பாள் பழனிசாமி, கரியம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில், வட்டாட்சியர் சந்திரா, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.