தர்மபுரி

சர்க்கரை உற்பத்தியில் அரூர் ஆலை முதலிடம் – மேலாண்மை இயக்குநர் தகவல்…

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2018-19-ம் ஆண்டு அரவை பருவம் 13.12.2018-ல் தொடங்கி 27.3.2019 அன்றுடன் முடிவுற்றது. அது சம்பந்தமான நன்றி அறிவிப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலரும் மற்றும் ஆலையின் மேலாண்மை இயக்குநருமான இரா.கீர்த்தி பிரியதர்சினி தலைமையில் நடைபெற்றது.

ஆலையில் 226121 மெ.டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டது. 240070 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. சர்க்கரை கட்டுமானத்தில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 10.61 சதம் எய்தி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் முதன்மை இடத்தை பிடித்து உள்ளது.

ஆலைக்கு கரும்பை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 256 வாகனங்கள் ஈடுபட்டன. மேலும் கரும்பு வெட்டும் பணியில் 186 வெட்டுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆலை அரவை சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த ஆலையின் விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், வாகன ஒட்டுனர்கள், வெட்டுக் குழுக்கள், கரும்பு அலுவலர்கள், கரும்பு களப்பணியாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆலையின் மேலாண்மை இயக்குநர் நன்றி தெரிவித்து கொண்டார்.

2019-20 அரவை பருவத்திற்கான நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,15,000 மெ.டன்கள் கரும்பு அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் பணிகளுக்கான வேலையாட்கள் தட்டுப்பாடு நிலவுவதால் கரும்பு வெட்டும் இயந்திரம் ஆலையின் அங்கத்தினருக்கு தமிழக அரசின் மான்ய உதவியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசன கருவிகள், உழவுக் கருவிகள், களை எடுக்கும் கருவிகள் மற்றும் கரும்பு சோகை தூளாக்கும் இயந்திரம் உள்ளிட்ட விவசாய கருவிகள் தமிழக அரசின் மான்ய உதவியின் மூலம் ஆலையின் அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்கருவிகளை விவசாயிகள் பயன்படுத்திட வேண்டுமென சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ரா.கீர்த்திபிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.