தற்போதைய செய்திகள்

சர்வதேச தரத்திற்கு திருப்பூரை மேம்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்…

திருப்பூர்:-

சர்வதேச தரத்திற்கு திருப்பூர் நகரை மேம்படுத்த இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பூர் தெற்கு தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் உள்ளிட்டோருடன் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அவர் திருப்பூரில் உள்ள ஜம்மனை வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, டூம்லைட், ராஜ வீதி, பி.கே.ஆர் காலனி, சி.டி.சி., உள்பட 150க்கும் மேற்பட்ட தெருக்களில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் திரண்டு கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், திருப்பூர் மாநகர் பின்னலாடை தொழிலால் சிறந்து விளங்குகிறது. கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் தான் பின்னலாடை தொழிலுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து தந்திருக்கிறது. சாயப்பட்டறை பிரச்சினையை தீர்க்க ரூ.200 கோடி வழங்கியது கழக அரசு என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நான்காவது குடிநீர் திட்டம், சீர்மிகு நகர திட்டம் என திருப்பூருக்கு தேவையான திட்டங்களை கழக அரசு கொண்டு வந்து தந்தது. சர்வதேச தரத்திற்கு திருப்பூர் நகரை மேம்படுத்த இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

இந்த பிரச்சாரத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கழக நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, மயூரிநாதன், ஷாகுல் ஹமீது, பா.ஜ.க தங்கராஜ், த.மா.கா நிர்வாகிகள் மோகன் கார்த்திக், சிறுமுகை ரவிக்குமார், பா.ம.க., கோவிந்தராஜ், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை பவுத்தன் தே.மு.தி.க., நிர்வாகிகள், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.