தற்போதைய செய்திகள்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 1000 வீரர்- வீராங்கனைகளுக்கு பயிற்சி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…

சென்னை:-

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக 1000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 2018-19-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை (Mission International Medal Scheme) சேர்ப்பதற்கான திட்ட தொடக்க விழா பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளர், தீரஜ்குமார் பேசினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர், சந்திர சேகர் சாகமூரி, வரவேற்புரை ஆற்றினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்து பேசியதாவது:-

இந்திய அளவில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் விளையாட்டில் இந்திய அளவில் கவனம் பெறுவதற்கும், தமிழகத்தில் இருக்கிற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சர்வதேச தரத்தில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கினை மறைந்த புரட்சித்தலைவி அம்மா ஏழே மாதத்தில் கட்டி முடித்தார். அதேபோல் 2004-ம் ஆண்டு விளையாட்டுத் துறைக்கென்று தனியாக கல்லூரியை நிறுவினார்கள்.

அம்மாவின் தொலைநோக்கு சிந்தனையும், தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கம் பெறுபவர்களுக்கு அதிகளவில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவித்தார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக 1000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதற்கு 30 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல, ஒவ்வொரு விளையாட்டரங்கத்தினையும் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு தேவைக்கேற்ப பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். விளையாட்டு அரங்கங்களில் மின்சிக்கனத்தை கருத்தில் கொண்டு சோலார் மின்வசதி அமைப்பதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.