தற்போதைய செய்திகள்

சர்வோதய சங்கங்களுக்கு வணிக அபிவிருத்தி நிதி வழங்க அரசு பரிசீலனை – சட்டப்பேரவையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்…

சென்னை:-

சர்வோதய சங்கங்களுக்கு வணிக அபிவிருத்தி நிதி வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  திருச்செங்கோடு தொகுதி கழக உறுப்பினர் பொன்.சரஸ்வதி திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரம சர்வோதய சங்கத்தைப் புதுப்பிக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 66 சர்வோதய சங்கங்களும் மத்திய அரசின் கதர் ஆணையகுழுவின் மாநில அலுவலகங்களிலிருந்து வழங்கப்படும் சான்றிதழ்களின் படி செயல்படுவதாகும்.

திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் காந்தி ஆசிரமம் ஒரு சர்வோதய சங்கமாகும். அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் ஆண்டுதோறும் உற்பத்திக்கான 20 சதவீதம் வணிக அபிவிருத்தி நிதி உதவித்தொகை மாநில அரசால் வழங்கப்படுகிறது. திருச்செங்கோடு ஆசிரமத்தின் செயலர் கேட்டுக் கொண்டதற்காக சிறப்பினமாக கருதி தமிழக அரசால் ஒருமுறை மானியமாக ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்வோதய சங்கங்களுக்கு 2014-15-ஆம் ஆண்டிற்கான வணிக அபிவிருத்தி நிதி 75 சதவீதம் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இச்சங்கங்களின் தணிக்கை முடிவுற்றுள்ளதால் எஞ்சிய 25 சதவீதம் வழங்கிட அரசு பரிசீலனையில் உள்ளது.

மேலும் 2015-2016-ம் ஆண்டிற்காக வணிக அபிவிருத்தி நிதி 75 சதவீதம் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை முடிவுற்ற பின்னர் எஞ்சிய 25 சதவீதம் வழங்கப்படும். மேலும் 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய வணிக அபிவிருத்தி நிதி 75 சதவீத முன்பணம் வழங்கிட அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.