தற்போதைய செய்திகள்

சாதனை திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் – வாக்காளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்…

விருதுநகர்:-

சாதனைத் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று வாக்காளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத்தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகர்சாமியை ஆதரித்து கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 15 நாட்களுக்கு மேலாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் உப்புப்பட்டி, எதிர்கோட்டை, மண்குண்டான்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

ஏழை மக்கள் வாழ்வில் வளம்பெற விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று கழக அரசு பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த அரசு மேலும் பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிட கழக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

சாத்தூர் தொகுதியில் கழக அரசு காலத்தில்தான் பல்வேறு சரித்திர திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாத்தூர் தொகுதியில் சாதனை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். விருதுநகர் எம்.பி. தேர்தலில் எங்களது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

பிரச்சாரத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், மயில்சாமி, எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ் பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, மாநில வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் மற்றும் புதிய தமிழகம், தே.மு.தி.க., பா.ஜ.க., பா.ம.க., ஜான்பாண்டியன் கட்சி, நடிகர் கார்த்திக் கட்சி, சேதுராமன் கட்சி உட்பட கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.