தற்போதைய செய்திகள்

சாத்தையார் அணை தூர் வாரப்படும் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி…

மதுரை:-

சாத்தையார் அணை தூர்வாரப்படும் என்று ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ரவீந்திரநாத் குமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊர்சேரி, ஆதனூர், தேவசேரிமூடுவார் பட்டி ஆகிய பகுதி வாக்காளருக்கு நன்றி கூறினார். அப்போது அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பொதுமக்கள் மத்தியில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அருள் ஆசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் நல்லாசியுடன் வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் ஆதரவுடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். உங்கள் முன்னேற்றத்திற்காக நிச்சயம் நான் பாடுபடுவேன். உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாத்தையார் அணை மூன்றரை கோடியில் தூர்வரப்படும். கொய்யா, மா மரங்கள் அதிகம் உள்ளதால் இங்கு கொய்யா, மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்கப்படும்

நாடாளுமன்ற தேர்தலின்போது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தருவேன் என்று கூறினேன். தமிழகத்திலுள்ள தலைசிறந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வண்ணம் வேலைவாய்ப்பு முகாமை ஏற்ப்படுத்தி அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அவரது தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை நான் நிச்சயம் பெற்றுத் தருவேன்.

அதுமட்டுமல்லாது படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் மூலம் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் பெற்றுத் தருவேன். அதேபோல் விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் கிடைக்க பாடுபடுவேன். சோழவந்தான் பகுதியில் நாடாளுமன்ற அலுவலகத்தை உருவாக்கி அதன் மூலம் உங்களுக்கு குறைகளை மனு கொடுத்தால் அதன்மீது நடவடிக்கை மேற்கொள்வேன்.தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளன. இதில் தேனி நாடாளுமன்றத் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன். குறிப்பாக குடிநீர் பிரச்சினைக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து தீர்த்து வைப்பேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.

இந்த பிரசாரத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் அலங்காநல்லூர். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தீரன் சின்னமலை, தேவர் சிலை அம்பேத்கர் சிலை, வ.உ.சி. சிலை ஆகிய சிலைகளுக்கு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.