தற்போதைய செய்திகள்

சாமானியனின் ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் சதி – அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு…

நாமக்கல்:-

சாமானியனின் ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என்று அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் டி.எல்.எஸ் ப.காளியப்பனுக்கு ஆதரவு கோரி ராசிபுரம் நகரில் நடைபெற்ற வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் நகர செயலாளரும், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

ஒரு விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் இன்று இந்த நாட்டை ஆளுகிற தகுதியைப் பெற்று இருக்கின்றார். அந்த சாமானியனின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த சிலர் திட்டம் தீட்டி கொண்டிருக்கின்றார்கள். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், நாங்களும், இங்கே இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளும் உங்களோடு இருந்து பணியாற்றி கொண்டிருக்கின்றோம். எங்களைப் பொறுத்தவரை வியாபாரிகளுக்கு எந்தவித கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என்பதை இங்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இங்கே இருக்கின்ற அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் எளிதில் சந்திக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இன்றளவும் நாங்கள் உங்களோடு இருந்து பணியாற்றிக் கொண்டு இருக்கின்றோம். உங்களுடைய பாதுகாப்பு உங்களுடைய தொழில் துறையினரும் உங்களுடைய தேவைகளையும் யார் உங்களோடு இருந்து பணியாற்றுவார்கள். யாரை எளிதில் சந்திக்க முடியும். யாரை சந்தித்தால் தங்களுடைய பணிகள் சீக்கிரம் முடியும். நீங்களே யூகித்து உங்களுடைய மனசாட்சிப்படி எங்களுடைய பணிகளை உங்களிடத்தில் கூறியிருக்கின்றோம். உங்களுடைய தேவைகளை செய்ய அரசு தயாராக இருக்கின்றது. அதேபோல இங்கே இருக்கின்ற வியாபாரிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் அவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

யார் சரியானவர்கள், யார் தவறானவர்கள் என்பதை அறிந்து, யார் நம்முடன் இருந்து நமக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை மனதில் வைத்து செயலாற்ற வேண்டும். நாங்கள் ஒரு அணியாக இருந்து பிரதமராக மோடி வரவேண்டும் என்று கூறுகின்றோம். ஜி.எஸ்.டி பற்றி எல்லோரும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசாங்கம் தான். என்பது அனைத்து வியாபாரிகளுக்கும் நன்றாக தெரியும்.

அதேபோல நீட்தேர்வு என்பதையும் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. அதை இந்த அரசு கொண்டு வருகின்ற பொழுது நாங்கள் பலமுறை சந்தித்து எந்தெந்த துறைகளில் பாதிப்பு இருக்கின்றதோ அந்தந்த துறைகளில் வரிகளைக் குறைத்து இருக்கின்றோம். இன்னும் எந்தெந்த துறையில் குறைக்க முடியுமோ அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். ஜிஎஸ்டி-யால் பாதிப்பு என்ற தவறான தகவலை எதிர்க்கட்சியினர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஜிஎஸ்டி-யால் மளிகைகடைகளுக்கோ, மற்றவர்களுக்கு பிரச்சினை கிடையாது. எந்த எந்த வரி அதிகமாக இருக்கின்றதோ அதை எல்லாம் பேசி குறைத்துள்ளோம். ஜாப் ஒர்க் வேலைகளுக்கு 28 சதவீதமாக போட்டு இருந்தார்கள். அதைப் பேசி 5 சதவீதமாக குறைத்து உள்ளோம்.

ஆக நம்முடைய கோரிக்கைகளை வைப்பதற்கு நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே இருந்தால் தான், நம்முடைய கோரிக்கைகளை வெற்றி பெற முடியும். மீண்டும் வாய்ப்பு வழங்குவீர்கள் என்று சொன்னால், நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். அதற்கு எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று தங்களிடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.