தற்போதைய செய்திகள்

சாயப்பட்டறை பிரச்சினைக்கு கழக ஆட்சியில் நிரந்தர தீர்வு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்…

திருப்பூர்:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கழகத்திற்கு அதிக வாக்குகள் பெற்று தரும் நிர்வாகிகளுக்கு தகுந்த பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது தொடர்பாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், கிராண்ட் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் மற்றும் கூட்டணி கடசி நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- 

”தமிழகத்துக்கு அதிக நலத்திட்டங்கள் தந்த புரட்சித்தலைவி அம்மா அரசு தொடர்ந்து மக்கள் பயன்பெறும் திட்டங்களை தந்து வருகிறது. பெண்கள், மாணவர்கள் பயன்பெறக்கூடிய பல நல்ல திட்டங்களை தந்துள்ளது இந்த அரசு. திருப்பூரில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை தந்து, சாயப்பட்டறை பிரச்சினைக்கு தீர்வு கண்ட கழக அரசால் தான் திருப்பூர் தொழில் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது.

திருப்பூர் மக்கள் என்றும் அம்மா அவர்களின் அன்புக்கு உரியவர்கள். இந்த தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்ளடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்காக அயராது நாம் பாடுபட வேண்டும். அவ்வாறு இந்த 6 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத்தரும், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு தகுந்த பரிசாக வழங்கப்படும். அனைவரும் அயராது உழைத்து நம் வெற்றி வேட்பாளர் எம்..எஸ்.எம்.ஆனந்தனை அதிக வாக்குகளில் வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இதன்பின்னர் கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா அவர்களின் கோட்டை. இங்கு கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுகிறார்கள். கம்யூனிஸ்ட்களால் திருப்பூர் தொழில் நலிவடைந்தது. அம்மா அவர்கள் சாதனைகளால் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அழித்தொழிக்கப்பட்டு, மீண்டும் தொழில் வளர்ச்சி பெற்றது. திருப்பூர் தொழிலை மீட்டெடுத்தவர் அம்மா அவர்கள். எனவே தொழில் வளர்ச்சி பெறவும், மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தவும், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பேசுகையில், திருப்பூர் வடக்கு தொகுதி எல்லா காலத்திலும் அம்மா அவர்களுக்கு அதிக வாக்குகளை பெரும் தொகுதி ஆகும். இந்த தேர்தலிலும் 6 தொகுதிகள் மட்டுமில்லாமல் தமிழக அளவில் அதிக வாக்குகள் பெற்று அமைச்சர் கூறிய 10 பவுன் தங்கம் பரிசை திருப்பூர் வடக்கு தொகுதி தட்டி செல்லும். அதற்காக அயராது பாடுபடுவோம் என்றார்.

இந்த கூட்டத்தில், அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், கருணாகரன், கணேஷ், பட்டுலிங்கம், வி.கே.பி.மணி, கலைமகள் கோபால்சாமி, பூலுவபட்டி பாலு, பி.கே.முத்து, முருகசாமி, பூபதி, சந்திரசேகர், ஹரிஹரசுதன், காலனி செல்வராஜ், நீதிராஜன், ஷாஜகான், பா.ஜ.க., சின்னசாமி, பாயிண்ட் மணி, த.மா.கா., ரவிக்குமார், மோகன் கார்த்திக், செழியன், பா.ம.க., உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.