சிறப்பு செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் உத்தரவு

சென்னை:-

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்த காவல் வாகனத்தின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து, திரிகூடபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில், திரிகோடபுரத்தைச் சேர்ந்த மைதீன் பிச்சை என்பவரின் மனைவி ஆயிஷாபானு என்கிற மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த ஆயிஷாபானு என்கிற மல்லிகா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிருவாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயிஷாபானு என்கிற மல்லிகா அவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.