தற்போதைய செய்திகள்

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 30 சதவீதம் குறைவு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…

தருமபுரி

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தருமபுரி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ‘சாலை பாதுகாப்பு வாரம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 30-வது சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை ‘சாலைப் பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 04.02.2019 அன்று முதல் சாலை பாதுகாப்பு வார விழா துவக்கப்பட்டு தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாகவும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்கொண்டதன் காரணமாக 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் 4 சதவிகிதம் விபத்துகள் குறைந்துள்ளது. மேலும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் 30 சதவிகிதம் குறைந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 1501 சாலை விபத்துகளில் 290 பேரும், 2018-ம் ஆண்டு 1447 சாலை விபத்துகளில் 204 பேரும் உயிரிழந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க பொது மக்கள், மாணவ- மாணவிகள் மிதமான வேகத்துடன் வாகனத்தை இயக்கியும், வாகனங்களில் பயணம் செய்வோர் தலைக்கவசம், சீட் பெல்ட்களை அணிந்து பயணம் செய்ய வேண்டும். விபத்தில்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிட பொது மக்கள் மாணவ மாணவிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.்

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், சேலம் துணை போக்குவரத்து ஆணையர் சத்திய நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், தருமபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், அங்குராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பூக்கடை ரவி, அம்மா வடிவேல், அழகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜாமணி, அன்புச்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.