தற்போதைய செய்திகள்

சிங்கநிகர் கழகத்தை சிறுநரி கும்பலால் எதுவும் செய்ய முடியாது – தமிழ்மகன் உசேன் ஆவேச பேச்சு

அரியலூர்

சிங்கநிகர் கழகத்தை சிறுநரி கும்பலால் எதுவும் செய்ய முடியாது என்று அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் கூறினார்.

அரியலூர் மாவட்ட கழக மாணவரணி சார்பில், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஓ.பி.சங்கர் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :-

மொழிப்போரில் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்கு கருணாநிதி அவரது 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார்? பரிதவித்துப்போன அந்த குடும்பத்தினர் பல்வேறு வழிகளில் கருணாநிதியிடம் நிவாரணம் வேண்டி கோரிக்கையை வைத்தார்கள். அதையெல்லாம் உதாசீனப்படுத்தியவர் கருணாநிதி. அண்ணா 1968-ல் ஆண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250 பென்ஷன் என அறிவித்தார்.

ஆனால் அதுவும் இடையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தவுடன் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களுக்கு பென்ஷன் அறிவித்தார். முதலில் அது மாதம் 250 ரூபாயிலிருந்து தொடங்கி, புரட்சித்தலைவி அம்மா காலத்தில் ரூ.3000 என்று உயர்த்தப்பட்டது. இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தலைவர்களால் மேலும் உயர்த்தப்பட்டு மொழிப்போர் தியாகிகள் “தமிழ்மொழிக் காவலர்கள்” என்ற பெயரில் மாதம் ரூ.4000 பென்ஷன் பெற்று மகிழ்கிறார்கள்.

கருணாநிதி கட்சியும், அதற்கு தலைவராக இருக்கிற ஸ்டாலினும் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடத்தியதற்கு என்ன அருகதை இருக்கிறது? தாய் தமிழை காப்பாற்றுகிற களத்தில் 1934-ல் நீதிக்கட்சி தொடங்கி பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகிய தலைவர்களின் வழியில் வீரநடை போடும் இன்றைய அம்மா ஆட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மட்டுமே வீரவணக்கநாள் நடத்துவதற்கான தகுதியும், உரிமையும் இருக்கிறது.

வீரமும், விவேகமும் நிறைந்த முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணித்தரமாக சொல்லி வருகிறார்கள். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் இன்றும், என்றும் தொடரும் என்று அவ்வப்போது அறிவித்து வருகிறார்கள்.

எனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக சிறந்த மக்கள் நல்லாட்சியை நடத்திவரும் இவ்விரு மாபெரும் தலைவர்களின் இக்காலத்தில் தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழகமே உயர்வு, தமிழர்களின் நலன்கள் மேலும் மேம்படும் என்பதில் மக்கள் மகிழ்ச்சியோடு நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் என்பதன் எதிரொலி தான் இரண்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி மற்றும் உள்ளாட்சித்தேர்தலில் மாபெரும் வெற்றி. அரசியலில் இன்றைக்கு சிங்கநிகர் வெற்றிபெற்ற நமது கட்சியை, கபட நாயகன் ஸ்டாலின் என்ற சிறுநரி கும்பல் எதுவும் செய்து விட முடியாது. அவரது பாச்சா பலிக்காது.

இவ்வாறு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.