உலகச்செய்திகள்

சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்…

சிங்கப்பூர்:-

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டுக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சிங்கப்பூர் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த அந்த கப்பலில் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கப்பலில் இருந்த 3 கன்டெய்னர்களை திறந்து பார்த்த போது 8.8 டன் (8,800 கிலோ) எடை கொண்ட யானை தந்தங்களும், 11.9 டன் எடை அளவிற்கு எறும்புதின்னி விலங்கின் செதில்களும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு சுமார் ரூ.89 கோடி இருக்கும் என்றும், இதற்காக 300 யானைகள் வேட்டையாடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல், எறும்புதின்னி செதில்களின் மதிப்பு ரூ.246 கோடி என்றும், இதற்காக 2 ஆயிரம் எறும்புதின்னிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.சிங்கப்பூர் வரலாற்றில் ஒரே நாளில் 8.8 டன் எடைகொண்ட யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.