சிறப்பு செய்திகள்

`சித்திரையே வா வாழ்வில் முத்திரை பதிக்கவா’ : கழக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து…

சென்னை:-

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமன ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் `தமிழ்ப் புத்தாண்டு’ வாழ்த்துச் செய்தி வருமாறு:-

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும், எங்கள் அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய “தமிழ்ப் புத்தாண்டு’’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி’’ என்னும் பழமையும், இலக்கிய வளமும், பண்பாடும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

புதிதாய் பிறக்கும் விகாரி தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும், இல்லத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்! “சித்திரையே வா! நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா!’’ என்று உளம் மகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில் அனைத்து வளமும், நலமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ் நாட்டினை மேலும் உயர்த்திட இந்த இனிய திருநாளில் உறுதியேற்போம்.

இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும், இனிமையும் தமிழர்தம் இல்லந்தோறும் தங்கிப் பொங்கட்டும் என்று, நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என மீண்டும் ஒருமுறை எங்களது உளமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு’’ நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.