இந்தியா மற்றவை

சிபிஐ இயக்குநராகப் பதவியேற்றார் ரிஷி குமார் ஷுக்லா…

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லா, இன்று காலை பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.முன்னதாக, 30 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் இருந்து பிரதமர் தலைமையிலான கமிட்டி ஷுக்லாவைத் தேர்வு செய்தது.

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார். தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார்.  நீதிமன்றம் அவரை மீண்டும் சிபிஐ இயக்குநராக நியமித்தது.

அலோக் வர்மா குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை தேர்வுக்குழுவுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மோடி தலைமையிலான தேர்வுக்குழு அவரை அதிரடியாக நீக்கியது. அதனைத் தொடர்ந்து சிபிஐ இயக்குநரை நியமிப்பதில் அரசு காலதாமதம் செய்தது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, ரிஷி குமார் ஷுக்லா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.