தற்போதைய செய்திகள்

சிப்காட் தொழில் பூங்காக்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவிப்பு…

சென்னை:-

தமிழகத்தில் சிப்காட் தொழில் பூங்காக்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  தொழில்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதிலுரை வருமாறு:-

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் வருங்காலங்களில் நிறுவப்படும் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சிப்காட் நிறுவனத்தால், கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தை சிப்காட் மற்றும் தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் இணைந்த ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக செயல்படுத்தும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் மூலமாக செயல்படுத்தும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் மூலமாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

சிப்காட் தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே அங்கு அமையப்பெற்றுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தங்களது பங்களிப்புடன் மேம்படுத்த முன்வந்துள்ளதை அங்கீகரிக்கும் வகையில் சிப்காட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ரூபாய் 10 கோடி தொகையை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யும். தொழிற்சாலைகள், தொழில் கூட்டமைப்பின் சமபங்களிப்பான ரூபாய் 10 கோடியையும் சேர்த்து ஆக மொத்தம் ரூபாய் 20 கோடி நிதியைக் கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் தெரிவு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

நிலையான, நீடித்த தொழில் வளர்ச்சியை அடையும் பொருட்டு, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காக்களான சிறுசேரி, இருங்காட்டுகோட்டை, திருப்பெரும்புதூர், ஒரகடம், வல்லம்-வடகால், தூத்துக்குடி மற்றும் ஓசூர் தொழில் பூங்காக்களை சுற்றுச்சூழலுடன் இணைந்த இயற்கை எழில்மிகு தொழில் பூங்காக்களாக மேம்படுத்தும் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், நீர்நிலைகள், பாதுகாப்பு, பூங்காவின் காற்றுத்தர மேம்பாடு, தண்ணீர் பாதுகாப்பிற்கு தேவையான தீர்வு, திடக்கழிவு மேலாண்மை, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, வர்த்தக மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை மேம்படுத்தப்படும்.

மேலும் சிப்காட் நிறுவனத்தின் மற்ற தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகளான கழிவுநீர் சுத்திகரிப்பு நீர்நிலைகள், சாலைகள், வடிகால் அமைப்பு போன்ற வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை சுமார் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். சிப்காட் தொழில் பூங்காக்களில் பசுமை சூழலை மேம்படுத்துவதற்காக, 2,32,000 மரக்கன்றுகள் ரூபாய் 9.65 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் நடப்படும்.

இதற்காக நடப்பாண்டில் வனத்துறை மூலம் இளங்கன்றுகள் வளர்ப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டில், வளர்ந்த மரக்கன்றுகள் சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள சாலைகளின் இருபுறமும் மற்றும் திறந்தவெளி நிலப்பரப்பிலும் நடப்படும். நடப்பட்ட மரக்கன்றுகள் சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சிப்காட் நிறுவனத்தால் பராமரிக்கப்படும்.

தொழில் முனைவோர்கள் தொழில் தொடர்பான அனைத்து சேவைகளையும் அவர்களது இருப்பிடத்திலேயே பெறும் வகையில், பயனாளிகள் எளிமையாகப் பயன்படுத்தும் விதத்தில் சிப்காட் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் சேவைகளை கணினிமயமாக்கி மேம்படுத்தவும் இணைய வழி ஒருங்கிணைந்த மென்பொருள் சேவை திட்டமொன்று ரூபாய் 1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தில் உருவாக்கப்படும்.

வான்பெறி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த துவக்கத் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க டைடல் பார்க் தொழில் முனைவோர் துவக்கி மையம் ஒன்று டைடல் பார்க் தரமணி வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 3 ஆயிரம் சதுர அடியில் ரூபாய் 4.65 கோடி முதலீட்டில் அமைக்கப்படும். செய்யாறு, செங்கல்வராயன் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பகுதியில் 550 கிலோவாட் திறன் கொண்ட ஏசி மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. அரவை பருவத்தில் அவசர தேவைக்காக மூன்று ஆலைகளுக்கும் பொதுவாக ஒரு மின் மோட்டார் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வடிப்பாலையில் 6,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கழிவுப்பாகு தொட்டியில் கழிவுபாகினை சேமித்து வைக்க ஏதுவாக ரூபாய் 49.75 லட்சம் மதிப்பீட்டில் தகடுகள் புதுப்பிக்கப்பட்டு ஆலையின் திறன் மேம்படுத்தப்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வடிப்பாலையில் உள்ள உயிர்வாயு செறிகலனில் பழுதடைந்துள்ள மேற்கூரை ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு ஆலையின் திறன் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் உப்பு உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு குஜராத் மாநிலம் பாவ் நகரில் அமைந்துள்ள மத்திய உப்பு மற்றும் கடல் சார் ரசாயன ஆராய்ச்சி மையத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு உப்பு நிறுவனம் தனது செறிவூட்டப்பட்ட உப்பின் விற்பனையை மேம்படுத்தவும், சிறந்தவொரு வணிக பெயரில் தனது உப்பு வகைகளை வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தி நிலைப்படுத்தவும் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.