தற்போதைய செய்திகள்

சிறப்பான தேர்தல் பாதுகாப்புப் பணி: காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு…

சென்னை

சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதாக காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தலையொட்டி சென்னையில் வியாழக்கிழமை சுமார் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினர் சுமார் 700 பேர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்தனர். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 450 வாகனங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கையின் காரணமாக, சென்னையில் பெரியளவில் வன்முறைச் சம்பவங்களோ,மோதல்களோ ஏற்படவில்லை.

இதையடுத்து காவல் ஆணையர் விசுவநாதன், வியாழக்கிழமை இரவு தேர்தல் பணி முடிந்த பின்னர் வாக்கி-டாக்கி மூலம் அனைத்து அதிகாரிகளையும், காவலர்களையும் பாராட்டினார். ஆணையரின் இந்த நடவடிக்கை போலீசாரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.