சிறப்பு செய்திகள்

சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.6000 24-ம்தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்…

சென்னை

சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை 24-ம்தேதி சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பு வருமாறு:-

வேளாண்மையில் இருமடங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு மும்மடங்கு வருமானம் என்னும் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, பல்வேறு கொள்கைகளை வகுத்து மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டம் பிரதமரால் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூரில் 24.02.2019 அன்று துவக்கப்பட உள்ளது.

அதே சமயத்தில், தமிழ்நாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், முதலமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் முன்னிலையில் மாநில அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது.

விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து, அதிக விளைச்சல் பெற்று, பண்ணை வருவாயை உயர்த்த உதவியாக ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 5 ஏக்கர் (2 எக்டேர்) வரையிலான சாகுபடி நிலங்களை உடைய தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் 6,000 ரூபாய் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. முதல் தவணைத் தொகையாக தகுதியுள்ள ஒவ்வொரு சிறு, குறு விவசாய குடும்பத்திற்கும் ரூ.2,000 வீதம் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில், முதலமைச்சர் தலைமையில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்ட விளக்க சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர், வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலைத்துறை இயக்குநர் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். விழாவில் கலந்து கொள்ளும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.