சிறப்பு செய்திகள்

சிறுபான்மை மக்களின் அரண் கழக அரசு – பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் உரை…

சிறுபான்மை மக்களின் அரணாக கழக அரசு திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சொத்துக்களை பாதுகாக்கவே மாறன் குடும்பம் தேர்தலில் போட்டியிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

சென்னை:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சாம்பால், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து திருவல்லிகேணி, சிந்தாதரிப்பேட்டை, அயனாபுரம், சூளை, எம்.எம்.டி.ஏ.காலனி, புஷ்பாநகர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைபெறுகின்ற மிக முக்கியமான தேர்தல். அண்டை நாடுகள் இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை நாட்டிலே ஊடுருவச்செய்து நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் இந்திய நாட்டிற்கு வலிமையான, திறமையான, உறுதியான பிரதமர் வேண்டும். அத்தகைய ஆற்றல் உள்ள பிரதமர் தான் நரேந்திரமோடி அவர்களை மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான். நாம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சாம்பால் போட்டியிடுகிறார். அவர் திறமையானவர், அவரை மிக எளிதிலே சந்தித்து, பொதுமக்கள் தங்களது குறைகளை எடுத்துக்கூற முடியும். ஆனால், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக இத்தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறனை நீங்கள் சந்தித்து உங்களது குறைகளை சொல்ல முடியுமா? அவர் இந்த தேர்தலின் போது உங்களைச் சந்திக்க வருவார். மீண்டும் அடுத்த தேர்தல் வந்தால் தான் உங்களைச் சந்திப்பார். எனவே, நீங்கள் எளிதில் சந்திக்கிற வேட்பாளராக இருக்கக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சாம்பாலுக்கு மாம்பழம் சின்னத்திலே வாக்களிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போது ஊழல், ஊழல் என்று பேசுகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க.அரசு, இதை அவர் மறந்து விட்டு பேசிக்கொண்டிருக்கிறார். இந்த தொகுதியில் வேட்பாளராக தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தயாநிதி மாறன் மீது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் இருக்கிறது. ஸ்டாலின் கழக அரசைப் பார்த்து ஊழல் அரசு என்று சொல்லுகிறார். அவர் ஊழலைப் பற்றி சொல்வதற்கு என்ன தகுதியிருக்கிறது. தயாநிதி மாறன் மீது அன்னியச் செலவானி வழக்கு ஒன்றும் அமலாக்கத்துறையால் நடத்தப்படுகிறது. கேபிள் டி.வியை ஆரம்பித்தவுடன் அதை முடக்கியதே தி.மு.க. தான். குறிப்பாக மாறன் சகோதரர்கள் தான் இதற்கு முழு காரணம்.

தொலைக்காட்சி உலகத்தில் பெரிய சாம்ராஜியத்தை நடத்தி வரும் இவர்களின் தொலைக்காட்சிகள் மொத்தம் 40 சேனல்கள் உள்ளன. சன் டி.வி.யில் கட்டணம் பேக்கேஜ் மாதந்தோறும் 56 ரூபாய். தனியாக சன் டி.வி வேண்டுமானால் 19 ரூபாய் கட்டினால் தான் டி.வி. சேனல்களை பார்க்க முடியும். முதலில் இவர்கள் உங்களுக்கு இலவசமாக அந்த சேனல்களை கொடுக்கட்டும். மத்திய சென்னை தொகுதி வாக்காளர்களுக்காகவது இலவசமாக கொடுக்க முன்வருவார்களா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். இவர்களால் தான் கேபிள் டி.வி. கட்டணம் அதிகமாகி உள்ளது. யாரை ஏமாற்றுவதற்காக இது போன்ற பொய்களை கூறுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தயாநிதி மாறன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் நிற்கவில்லை. பதவியை வைத்துக்கொண்டு தனது சொத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலில் அவர் நிற்கிறார்.
தி.மு.க ஆட்சியில் ஊழல் நடந்தது என்பதற்கு இன்றும் சான்றாக இருப்பது, வீராணம் குடிநீர் திட்ட ஊழல். இந்த திட்டத்திற்காக நிதியை வீணடித்ததோடு மட்டும் அல்லாமல் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புரட்சித்தலைவி அம்மா புதிய வீராணம் திட்டத்தைக் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கியிருக்கிறார்கள். இஸ்லாம்பெருமக்களுக்கு அரணாகவும், பாதுகாவலனாகவும் இருக்கும் அரசு அம்மாவுடைய அரசு. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ரூ.6 கோடி மாநில நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும்.

சாதிக் பாட்சா பெரம்பலூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர். கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை சாதிக்பாட்சா கம்பெனியில் முதலீடு செய்திருந்தார். சி.பி.ஐ. விசாரணையின் போது சாதிக்பாட்சா கூறிய ஒரு தகவல் அவரது உயிருக்கே உலைவைத்துவிடுகிறது. அப்படி என்னதான் சாதிக்பாட்சா சி.பி.ஐ.-யிடம் கூறினார்? ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாதிக் பாட்சா என்பவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்பது தான் அது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஸ்டாலின் உட்படுத்தப்படுகிறார் என்ற தகவலை சொன்னதற்காக சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்றைய தி.மு.க அரசால் அந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. ஆனால், அது கொலைதான் என்று அவரது குடும்பம் கூறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாதிக் பாட்சாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது குடும்பத்தினர் “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் சாதிக்பாட்சா மனைவி ரேணுகாபானு மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளர்கள். இது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில்,புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2005ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்பு வந்த தி.மு.க அரசு அதை கிடப்பிலே போட்டுவிட்டது. அதனை தொடர்ந்து, ஆட்சிப்பொறுப்புக்கு வந்த அம்மா மீண்டும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி, முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 54கி.மீ.-க்கான வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அம்மாவின் அரசு, இரண்டாவது கட்டமாக 118.90கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவைப்பணிக்காக சுமார்       ரூ.79 ஆயிரம் கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

கழகத்தின் நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை மாவட்டங்கள்தோறும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என புரட்சித்தலைவி அம்மா திட்டமிட்டிருந்தார். அம்மாவின் எண்ணக் கனவுகளை நிறைவேற்றிடும் வகையில் 32 மாவட்டங்களிலும் அரசின் சார்பில் மிகச்சிறப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும் அறிவித்து, செயல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என அழைக்கப்படும் என்று பாரதப்பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதன் மூலம் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சாம்பாலுக்கு மாம்பழம் சின்னத்திலும், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.