தற்போதைய செய்திகள்

சிறுபான்மை மக்களை பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை – ஆம்பூரில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு…

வேலூர்:-

சிறுபான்மை மக்களை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆம்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

ஆம்பூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஜெ.ஜோதி ராமலிங்க ராஜா ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் .

அப்போது அவர் பேசியதாவது;-

பணம் படைத்தவர்கள் ஆயிரம் பேர் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால் இறைவன் அருள் மற்றும் நல்ல குணம் உடைய வேட்பாளர்கள்  ஏ.சி.சண்முகம், ஜெ.ஜோதிராமலிங்கராஜா ஆகியோர் ஆவர். அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றால் 100 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். சிறுபான்மை மக்களைப் பற்றி பேச தி.மு.க.வுக்குகு அருகதை கிடையாது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் 9 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்டுப்பெற்றும் ஒரு தொகுதி கூட சிறுபான்மை சமுதாய மக்களுக்கு ஒதுக்கவில்லை.

காங்கிரஸ்- தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆகவே அவர்கள் விரிக்கும் வலையில் விழவேண்டாம். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சாதாரண, எளிமையான நல்ல தலைவர்கள். முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சாமானிய மக்களுடன் பழகி அவர்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, அறிந்து, புரிந்து, கிராமம் முதல் நகரம் வரை ஏழை, எளிய, நடுத்தர, மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சிறப்பு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் .

பெண் சமுதாயம் கல்வி அறிவு பெற்றால் நாடே கல்வி அறிவு பெற்றதற்கு சமம் . பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறேன். மத்தியிலும் ,மாநிலத்திலும் ஒருமித்த கருத்து கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் மரியாதையான கட்சிகள். தேர்தலுக்குப் பிறகும் இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக விளங்கும். சிறுபான்மை மக்களின் நலன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், பாதுகாப்பிற்கும் அதிமுக ,பாஜக , பாமக , தமாகா தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகள் உறுதியும், உத்தரவாதமும் வழங்கும். விலை மதிப்பு மிக்க வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், ஜெ.ஜோதிராமலிங்கராஜா ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாற ஜி.கே.வாசன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஏ.டில்லிபாபு, நகர கழக செயலாளர் எம்.மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி, பி.சதீஷ்குமார், த.மா.கா மாவட்ட தலைவர்கள் கே.குப்புசாமி, பி.எஸ்.பழனி, துணைத்தலைவர் விஜயன், நகர தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.