தற்போதைய செய்திகள்

சி.பி.எஸ்.இ.யை முந்தும் அளவிற்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்…

திண்டுக்கல்:-

சி.பி.எஸ்.இ.யை முந்தும் அளவுக்கு புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி என்.எஸ்.வி.வி. மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மடிகணினி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு 186 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் தேவையை அறிந்து தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களின் மூலம் மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கென பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கிராமப்புறத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையிலும், பெற்றோர்களின் சிரமத்தை குறைக்கின்ற வகையிலும், தமிழக மாணவ, மாணவிகள் வரலாறு படைக்கும் தொலைநோக்கு சிந்தனையுடன், தமிழக அரசால் போட்டி தேர்வுகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமினை ஏற்படுத்தப்பட்டு திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மேலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை முந்துகின்ற அளவிற்கும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கும் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கவும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.468 கோடி மதிப்பீட்டில் இணையதள வழிக்கல்வி முறையினை நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இன்றைய நவீன உலகில் நடைமுறையில் உள்ள உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, தங்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் அவர்களின் திறமையை வளர்த்து தங்களது தகுதியை மேம்படுத்தி கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது நிலையையும், தங்களின் குடும்ப சூழ்நிலையையும் மேம்பாடு அடைய செய்ய முடியும். அதற்கு அடிப்படையாக அமைவது, என்றும் அழியா சொத்தான கல்வியே ஆகும்.

ஆகவே மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு தமிழக அரசு, பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ் உட்பட கற்றலுக்குத் தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவிகள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சோ.சாந்தகுமார், நிலக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் யாகப்பன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.