தற்போதைய செய்திகள்

சீனா,பிரான்ஸ் சிங்கப்பூர் நாடுகளில் தமிழுக்கு அங்கீகாரம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம்…

சென்னை:-

சீனா, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாட்டின் கலை நிறுவன பண்பாட்டு நிறுவனத்தால் 1999-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டு, அதற்கிணங்க உலகெங்கிலும் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது. அவ்வகையில், 2014-ம் ஆண்டு முதல் உலகத் தாய்மொழி நாள் தமிழ் வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் உலகத் தாய்மொழி நாள் 21.02.2019-ம் நாளன்று சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நூலகக் கட்டடத்தில் தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கியது.

முதல் நிகழ்ச்சியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் இரா.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைக்க ‘மாண்புகள் நீயே’ என்ற தலைப்பில் பாரதி சுகுமாரன் தலைமையில் கவிஞர் தியாகு, இரா. தங்கராசு, சேக்கிழார் அப்பாசாமி, தர்சிணி மாயா, ர.ரேகா மணி, செல்வன் ச.நரேசுகுமார், மு. சங்கீதா, ஜீவா காசிநாதன் ஆகியோர் பங்கேற்று கவிபாடினர்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் கருத்தரங்கத்தை கம்பன் புகழ்பாடி முனைவர் பால ரமணி தலைமையில் ‘தமிழ் மொழி அல்ல, அடையாளம்’ என்ற தலைப்பில் ஆவடிக்குமார், முனைவர் இதயகீதம் இராமானுசம், முனைவர் வேணு புருசோத்தமன், கோ.மணி, மு.முனீசுவரன், பழ.பாசுகரன், நா.சுலோசனா, பொன்னி ஸ்ரீ பூசா ஆகியோர் பங்கேற்று கருத்துரை ஆற்றினர்.
மேலும், ஜனனி குழுவினர் ‘எங்கும் தமிழிசை’ என்ற தலைப்பில் தமிழிசைப் பாடல்களை இசைத்தனர். பிற்பகல் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாக விரிவாக்கம் குறித்து பாராட்டினார். ஒரு நாடு இணைவதும் பிரிவதும் மொழியால்தான் என்பதைச் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானில் 20 விழுக்காடு மக்கள் பேசப்பட்டு வந்த உருது ஆட்சிமொழியாக்கப்பட்டபொழுது 60 விழுக்காடு மக்கள் பேசப்பட்டு வந்த வங்க மொழிக்கு எதிராக அந்த ஆணை இருந்ததால் மக்களிடையே கிளர்ச்சி ஏற்பட்டது. இக்கிளர்ச்சியில் நான்கு பேர் உயிரிழந்தனர். இச்செய்தியை அவர்கள் உலகறியச் செய்ததன் பயனாக உலகத் தாய்மொழி நாள் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத் தலைமுறையினரால் தான் தாய்மொழியை வளர்த்தெடுக்க முடியும். மொழி அழிந்தால் பண்பாடு அழியும். உலகமயமாக்கத்தாலும் தொழில் நுட்பத்தாலும் மொழிகள் அழிகிற சூழல் இருக்கிறது.

தானாகவே விழுந்து எழுந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மொழி நம் தாய்மொழியே. சீனா, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற உலகநாடுகளில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ் வளர் மையங்கள், தமிழ் பண்பாட்டு மையங்கள், சொற்குவைத் திட்டம் இவைகளின் வழி தமிழை தகைசால் இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டும். சீனாவில் மாண்டிரினும், தமிழ்மொழியும் உலக மொழிகளில் எழுத்திலும் பேச்சிலும் வாழும் மொழியாக செம்மாந்து திகழ்கிறது.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ந.அருள், பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன், க.பசும்பொன், பொன்.குமார், இரா. குணசேகரன், கா.மு.சேகர் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினார்கள். தமிழ் வளர்ச்சி நிர்வாகத் துணை இயக்குநர் ம.சி.தியாகராசன் நன்றி கூறினார்.