தற்போதைய செய்திகள்

சீர்காழியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடம் – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு…

சென்னை:-

சீர்காழியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில்  கேள்வி நேரத்தின் போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி கேள்வி ஒன்றை எழுப்பினார்.

சீர்காழியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கட்டடம் கட்ட அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதிலளித்து கூறியதாவது:

‘நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கென சீர்காழி தாலுகா காரைவீடு கிராமத்தில் 2.48 ஹெக்டேர் பரப்பரளவு கொண்ட நிலத்தில் 1.24 ஹெக்டேர் நிலம் போக்குவரத்துத் துறைக்கு நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேவையான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு இந்த ஆண்டு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே போல் கேள்வி நேரத்தின் போது ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
திமிறி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேட்டார்.
அதற்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், திமிறி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் கால்நடை அலகுகள் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதால் உரிய கால்நடை நிலையம் துவக்க சாத்திய கூறுகள் உள்ளன. எனவே அரசின் செயல்திட்டத்தில் இடம் பெறும் போது இந்த கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.