தற்போதைய செய்திகள்

சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு…

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்துக்கு சீவலப்பேரியில் இருந்து குடிநீர் கொண்டு வருகின்ற வகையில் ரூ.234 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு நடைபெற்று வந்த சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், சாத்தூர் வட்டம், வெங்கடாசலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூட்டு குடிநீர் திட்ட சோதனை ஓட்ட நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 755 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாக வைத்து கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். எனது கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்து தாயுள்ளத்துடன் அம்மா அவர்கள் 11.08.2010-ல் வெளியான அரசாணையின் மூலம் இத்திட்டத்துக்கு ரூ.234 கோடியை ஒதுக்கீடு செய்தார்.

இத்திட்டத்தின் மூலம் அடிப்படை ஆண்டு 2012 மற்றும் உச்சகால ஆண்டு 2042ல் முறையே 5,43163 மற்றும் 6,51,786 பொதுமக்கள் பயனடைகின்ற வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஐதராபாத்தை சேர்ந்த ஐ.வி.ஆர்.எல் நிறுவனத்துக்கு 29.12.2011 அன்று வழங்கப்பட்ட ஒப்பந்தம், பணி மெத்தனம் காரணமாக ரத்து செய்யப்பட்டு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு சென்னையை சேர்ந்த சி.சி.சி. லிமிடெட், நிறுவனத்திற்கு, இத்திட்டத்தில் உள்ள மீதி பணிகள் செயல்படுத்துவதற்கான பணி ஆணை 28.01.2016-ல் வழங்கப்பட்டது. இந்த பணிகளை விரைவுபடுத்துகின்ற வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை ஆய்வுக்கூட்டங்களை நடத்தி அதை துரிதப்படுத்துகின்ற பணிகளை நானும், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானமும் மேற்கொண்டோம்.

தற்போது, இத்திட்டத்தில் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, சோதனை ஓட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே தாமிரபரணி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 210 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, பின்பு முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 210 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்பத்தூர் விலக்கு நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்காக 700 மி.மீ விட்டமுள்ள பிரதானக் குழாய் 65 கி.மீ நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. பின்பு உப்பத்தூர் விலக்கு நீரேற்று நிலையத்திலிருந்து நடுவப்பட்டி மற்றும் பாவாலி விலக்கு ஆகிய இடங்களில் உள்ள பிரதான தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 156 தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் மூலம் 755 ஊரக குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 1357 கி.மீ நீளத்திற்கு நீரேற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சாத்தூர் நகராட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பல கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக சாத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இருக்கண்குடி அணைக்கட்டு பகுதிகளில் ரூ.3 கோடி செலவில் இரண்டு நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்து, தலைமை நீரேற்று நிலையம் வரை நீர் உந்து குழாய்கள் அமைத்து பணிகள் முற்றிலும் முடிவடைந்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் சாத்தூர் நகராட்சிக்கு மேலும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல், சாத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த இடங்களில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கும், பேவர் பிளாக் கல் பதிப்பதற்கும் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. எனவே, சாத்தூர் பகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து அதை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றும் பணிகளில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சாத்தூர் நகர செயலாளர் என்.எஸ்.வாசன், ஒன்றிய செயலாளர்கள் சாத்தூர் கிழக்கு கே.எஸ்.சண்முகக்கனி, மேற்கு வி.தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்கு எதிர்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன், மேற்கு ஏ.எஸ்.ராமராஜ் பாண்டியன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.வேல்முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாஸ்கரன் துரைசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.